முகப்பு Uncategorized தமிழ் இதழியல் பல்கலைக்கழகம் அமைக்க தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல்

தமிழ் இதழியல் பல்கலைக்கழகம் அமைக்க தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல்

114
0

பெங்களூரு, ஜன. 6: கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழ் இதழியல் பல்கலைக்கழகம் அமைக்க தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

கருநாடகத்தில் தமிழ் இதழியலுக்காகவும், தமிழ் இதழாளர்களுக்கும் திறம்பட பணியாற்றி வரும் கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் இதழியல் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ் இதழியலுக்கு அடிப்படையாக இருக்கும் தமிழ்மொழியை பரப்பும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பிப்.7 ஆம் தேதியை கருநாடகத் தமிழ் இதழாளர் நாளாக அறிவித்து, 4 ஆம் ஆண்டாக கொண்டாட இருக்கிறது. இந்த நாளில் தமிழ் இதழியல் கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்துவதோடு, கருநாடகத்தில் தமிழ் இதழியலுக்கு பெரும் பங்காற்றிய இதழாளர்களை பாராட்டி விருதுகளை வழங்கி வருகிறது.

அடுத்த தலைமுறையிடம் தமிழை கொண்டு செல்ல கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்ப் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. தமிழ் இதழியல் சார்ந்த கருத்தரங்கம், பயிலரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. பாரதிதாசன் பிறந்தநாளாம் ஏப்.29 ஆம் தேதியை உலகத் தமிழ் நாளாக அறிவித்து, கடந்த 3 ஆண்டுகளாக கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், உலக அளவில் தமிழ் இதழியலின் தரத்தை மேம்படுத்தவும், அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகவமைத்துக்கொள்ளவும், சந்தை வாய்ப்புகளை தக்கவைத்துக்கொள்ளவும் தமிழ்நாடு அரசின் சார்பில் ‘தமிழ் இதழியல் பல்கலைக்கழகம்’ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கருநாடகத் தமிழ்ப் பல்கைக்கழகம், 2024ஆம் ஆண்டு நவ.7ஆம் தேதி கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டது.

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் முன்வைத்த ‘தமிழ் இதழியல் பல்கலைக்கழகம்’ அமைக்கும் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருப்பதாக தமிழ்நாடு அரசு பதில் கடிதம் எழுதியுள்ளது. எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் நன்றி தெரிவிப்பதோடு, இத்திட்டத்தை 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, உடனடியாக அமலுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் இதழியல் பல்கலைக்கழகம் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தமிழ் இதழியலின் தரம் உயரும், மேம்படும் நம்பிக்கை உள்ளது. அது, தமிழ் இதழியலின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு உரமிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் இதழியல் பல்கலைக்கழகம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு, கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்க, அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். அப்போது தான் இது நடைமுறைக்கு வந்து, தமிழ் இதழியலின் வளர்ச்சிக்கு வித்தாக அமையும். தமிழ் இதழாளர்களே ஒன்டுபடுவோம், தமிழ் இதழியலுக்கு உரமிடுவோம் என கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ந.முத்துமணி அறிக்கை விடுத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்