முகப்பு State கர்நாடகத்தில் தமிழர்கள் ஒற்றுமையாக வேண்டும்: பைப்பனஹள்ளி டி.ரமேஷ்

கர்நாடகத்தில் தமிழர்கள் ஒற்றுமையாக வேண்டும்: பைப்பனஹள்ளி டி.ரமேஷ்

291
0

தங்கவயல், ஜூலை 14: கர்நாடகத்தில் தமிழர்கள் ஒற்றுமையாக வேண்டும். அப்போதுதான் ஆட்சி அதிகாரத்தைப் பெறமுடியும் என்று காங்கிரஸ் கட்சியின் தென்னிந்திய அமைப்புச்சார தொழிலாளர்களின் தலைவர் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கும் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரை சந்தித்து, பின்னர் அவர் பேசியது: கர்நாடகத்தில் 80 லட்சத்திற்கும் அதிமாக இருப்பார்கள் என்பது எனது கணிப்பு. அதைவிடவும் அதிகம்பேர் இருக்கக் கூடும். ஆனால் உண்மையான எண்ணிக்கை நம்மிடம் இல்லை.

கர்நாடகத்தில் மாவட்டங்கள் தோறும் பல்வேறு தமிழ் அமைப்புகள் உள்ளன. ஆனால் அமைப்புகளில் உள்ளவர்கள் மட்டுமின்றி, தமிழர்கள் ஒற்றுமையாக இல்லை. ஒற்றுமையாக இருந்தால், கர்நாடகத்தில் நாம் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியும்.

மற்ற மொழியினர், மதத்தினர், ஜாதி சங்கத்தினர் ஒற்றுமையாக இருந்து, தங்களுக்கான ஆட்சி அதிகாரத்தை பெறுகின்றனர். இதனால் அவர்களுக்கு தேவையான வளர்ச்சிப்பணிகளை, அவர்களால் செய்து கொள்ள முடிகிறது.

தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே கர்நாடகத்தில் அதிகாரப்பதவிகளை பெறமுடியும். ஏதாவது ஒரு நிகழ்வில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் தமிழர்கள் ஒன்று கூடி, நமது ஒற்றுமையைக் காட்டினால் மட்டுமே ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும் நம்மை உற்று கவனிப்பார்கள்.

அதற்கான முயற்சிகளை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். தமிழர்களை ஒற்றுமைப்படுத்த யார் தலைமை ஏற்றாலும், அவர்கள் பின்னால் செல்ல நான் தயாராக இருக்கிறேன். தலைமையில் நான் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தமிழர்களை ஒற்றுமைப்படுத்த தன்னலமில்லாமல் யார் தலைமை ஏற்றாலும் அவர்களை பின் தொடர நான் மட்டுமின்றி தமிழர்கள் தயாராக உள்ளனர். அதுபோன்ற நிலைமை ஏற்படும் வரையில் தமிழர்களை ஒற்றுமைப்படுத்தும் பணியில் நான் தொடர்ந்து ஈடுபடுவேன். தமிழர்கள் ஒன்றுபட்டு, மாநிலத்தில் தங்களுக்கான வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு என்பதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த காலம் விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

நிகழ்வில் கமல் முனிசாமி, திருமுருகன், ஆதி குமாரய்யா, கருணாகரன், ஸ்ரீநிவாஸ், பாஸ்கர், கோபி, பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்