பெங்களூரு, ஆக. 7: இந்தியாவிற்கு ஜனநாயக முறையை வழிகாட்டியவர் கலைஞர் மு.கருணாநிதி என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.
பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள மாநில திமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக. 7) தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் 7வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு, கலைஞரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், இந்திய நாட்டின் பல குடியரசு தலைவர்களையும், பிரதமர்களையும் உருவாக்கிய ஆற்றல் படைத்தவர். கலைஞர் பெற்றெடுத்த திருமகன் தான் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதனை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.
அவர் திராவிட அரசியலை தமிழ்நாட்டில் நடத்திக்கொண்டுள்ளார். திராவிட அரசியல் என்பது சாதாரணமானது அல்ல. திராவிட இனத்தின் பெருமையும், புகழையும் எடுத்து விளக்குகின்ற மாபெரும் தலைவர். இந்த உலகம் போற்றுகின்ற அளவிற்கு வளந்துள்ளார். இந்திய நாட்டின் சரித்திரத்தை மாற்றுகின்ற சக்தி அவருக்கு உண்டு.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அருதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதி. அதற்காக கர்நாடக மாநில திமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தங்களது உறவினர்கள், நண்பர்களிடம் திமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்து, அரசின் சாதனைகள், திட்டங்களையும், அதனால் அவர்கள் பயனடைந்ததை பற்றியும் எடுத்துக் கூற வேண்டும். திமுக கூட்டணிக்கு வாக்களிக்கும்படி அவர்களிடம் வலியுறுத்த வேண்டும்.
அதற்காக கர்நாடக மாநில திமுகவினர் அயராது பாடுபடுவோம். இம்முறை 7வது முறையாக திமுக ஆட்சி பொறுப்பை தமிழ்நாட்டில் ஏற்கும். அதன் முதல்வராக தளபதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றால், இந்திய அரசியலை மாற்றும் சக்தியாக வளருவார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இந்தியாவில் மக்களை சந்தித்து அரசியல் செய்யும் ஒரே தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் விளங்குகின்றார் என்றார்.
நிகழ்வில் மாநில திமுகவின் துணை அமைப்பாளர் ஜி.ராமலிங்கம், முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.மணி, ஏ.டி.ஆனந்தராஜ், கே.ஏ.சுந்தரேசன், லோகநாதன், தொமுச பேரவையைச் சேர்ந்த சிவசங்கரன், ஹரிஹர புத்திரன், மகேஷ்பாபு, தனுஸ்ஹ், ரவி, கிருஷ்ணன், சுனில், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மு.ராஜசேகர், முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
































































