கிருஷ்ணகிரி, மார்ச் 25: கிருஷ்ணகிரி மண்டலப் பேரவைக்கிளை சார்பாக இந்திய பேனா நண்பர்கள் பேரவையின் 31வது ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மண்டலப் இந்திய பேனா நண்பர்கள் பேரவைக்கிளையின் அமைப்பாளர் வே. நாகப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு கிருஷ்ணகிரி சப்தகிரி மேல்நிலைப்பள்ளி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) பேரவையின் 31வது ஆண்டு தொடக்க விழா அதன் தலைவர் மா.கருண் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பேரவைக் குடும்ப இளவல்கள் மற்றும் மகளிர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது.
இப் பெருவிழாவுக்கு பேரவையின் மூத்த உறவுகள் பாவலர் கருமலை தமிழாழன், அக்ரி.என்.ஆர்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்து, வாழ்த்துரையும் வழங்கினர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பேரா. முனைவர் கு.வணங்கமுடி (தாளாளர், சப்தகிரி மேல்நிலைப் பள்ளி) பேரவையின் வரலாற்றுப் பெருமைகளையும், நிகழ்ச்சிக்கு மகிழ்ச்சியையும் தெரிவித்து வாழ்த்துரை வழங்கியதுடன், கடந்த 29 ஆண்டுகளாகப் பேரவையின் உற்ற தோழமையாகப் பயணிக்கிறேன் எனப் பெருமையுடன் குறிப்பிட்டார்.

பேரவைத் துணைத் தலைவர்முனைவர் சி.சிவ.பிரேம் பிரகாஷ், பேரவை உறவுகள் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து, பேருரையாற்றி அனைவர்க்கும் பயனாடை அணிவித்து மகிழ்ந்தார். கிளையின் புதிய ஒருங்கிணைப்பாளராக கு.இரத்தினம், துணை ஒருங்கிணைப்பாளராக மாரிமுத்து அருணாசலம் ஆகியோரை
பேரவைத் தலைவர் அறிமுகம் செய்து, பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
புதிய உறவுகளாக இணைந்த எஸ்.சிவகுமார் எஸ்ஆர்எம், ஜேசி.ஆர்.வடிவேல் ஆகியோரை அறிமுகம் செய்து, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மண்டலக்கிளை உறவுகளின் திருமணநாள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகள் பகிர்வுடன், அனைவர்க்கும் பயனாடை அணிவித்துப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தினந்தோறும் திருக்குறள் பதிவு மற்றும் குங்பு போட்டியில் பரிசுகள் வென்ற பேரவை உறவுகள் எஸ்.சிவகுமார் (எ) சாமி – வீணா தம்பதியரின் இளவல்கள் ஹேமந்த், சிரிஷ்டி திரு. சுரேஷ் கண்ணன் அவர்களின் மகள் சு. சஹானா ஆகியோருக்கு விழா சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.

கோவை நட்புச் சங்கமம் (2025 மே 24-25) நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொள்வது பற்றி தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் கு.இரத்தினம் அவர்கள், மேற்பார்வை செய்தார். துணை ஒருங்கிணைப்பாளர மாரிமுத்து அருணாசலம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினர். கர்நாடகா மாநிலப் பேரவைக் கிளை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஓசூர் வரை தலைவர் அவர்களை அழைத்து வந்த தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.வி. கிப்சன் அவர்களுக்குச் சிறப்புப் பாராட்டு பதிவு செய்யப்பட்டது. இனிய அறுசுவை மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
































































