தங்கவயல், ஜூலை 7: தங்கவயலில் தாய் மொழி கற்கும் உரிமை வேண்டி நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த 4 பேருக்கு தமிழ் அமைப்புகள் நினைவஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1982ம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடக அரசு கொண்டு வந்த புதிய மொழி கொள்கையை எதிர்த்தும், தாய்மொழியை கற்கும் உரிமையை வேண்டியும் தங்கவயலில் போராட்டம் வெடித்தது. 3 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த போராட்டதை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடுநடத்தினர். இதில் பால்ராஜ், உதயகுமார், பரமேஷ், மோகன் ஆகிய 4 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
இவர்களின் நினைவாக சாம்பியன் பி வட்டம் மற்றும் உரிகம் என்.டி.பிளாக் ஆகிய பகுதிகளில் நினைவு தூண் எழுப்பப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5,6,7ஆகிய தேதிகளில் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன்படி நேற்று மொழி போர் தியாகிகளின் 43ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பில் மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவருமான முனைவர் எஸ்.டி.குமார் பேசும் போது, “ஆழ் சுரங்கத்தில் உயிரை பணயம் வைத்து கட்டி தங்கத்தை வெட்டி தந்த தங்கவயல் தமிழர்கள், எங்களுக்கு தங்கம் வேண்டும் என்று கேட்கவில்லை. தங்களின் தாய் மொழி கற்கும் உரிமையை தான் கேட்டார்கள். ஆனால் அவர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் தான் பரிசாக கிடைத்தது. தாய் மொழி உரிமைக்காக உயிரை தந்த தியாகிகளுக்கு வீர வணக்கம்” என்றார்.
ஏற்பாடுகளை கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், செய்திருந்தது, இதில், தமிழ் மொழி கூட்டமைப்பு, விடுதலைப் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், உலக தமிழ் கழகம், தமிழ் மொழி சிறுபான்மையினர் நலப்பேரவை, கர்நாடக நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை உள்பட தமிழ் அமைப்புகள், உரிகம் என்.டி.பிளாக், மற்றும் ‘பி’ வட்ட தமிழ் சங்க வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணுக்கு மலர் அஞ்சலி செலுத்தி, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
































































