பெங்களூரு, ஆக. 18: தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அருதிப் பெரும்பான்மை பெற்று 7 முறையாக ஆட்சி அமைக்கும் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.
பெங்களூரில் ராமசந்திரபுரத்தில் மாநில திமுக தலைமை அலுவகத்தில் கர்நாடக திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 92வது பிறந்தநாள் விழா திங்கட்கிழமை (ஆக. 18) கொண்டாடப்பட்டது. இதற்கு திமுக மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் முரசொலிமாறன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பேசிய ந.இராமசாமி, திராவிட முன்னேற்ற கழகத்தின் தூணாக விளங்கியவர் முரசொலி மாறன். கட்சியின் வளர்ச்சிக்கும் பெரும் பாடுபட்டவர். கலைஞர் மு.கருணாநிதியின் மனசாட்சியாகவும் விளங்கியவர் அவர். 1956 ஆம் ஆண்டிலேயே ஏன் வேண்டும் இன்ப திராவிடம் என கட்டுரை எழுதியவர். அந்தக் கட்டுரை உலகம் பிரசித்தி பெற்றது. அந்த கட்டுரையில் குறிப்பிட்ட கருத்தை இன்று உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது.
அவர் மத்திய அமைச்சராக இருந்து போது உலக நாடுகளில் ஆற்றிய உரைகள் அத்தனையும் உலக நாடுகளில் புகழ்பெற்றவையாக உள்ளன. அவர் மத்திய அமைச்சாராக இருந்தப்போது திமுக கொள்கைகளை தில்லியில் பரப்பியவர். அவரின் ஏன் வேண்டும் இன்ப திராவிடம் என்ற கொள்கைக்கு ஏற்ப தற்போது தமிழ்நாட்டில் தளபதி மு.க.ஸ்டாலின் திராவிடமாடல் ஆட்சி நடத்தி வருகிறார். 2026 இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அருதிப் பெரும்பான்மை பெற்று 7 முறையாக ஆட்சி அமைக்கும். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றார்.
நிகழ்வில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ் மணி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜசேகர், மகளிர் அணி அமைப்பாளர் சர்குணா, தொமுச பேரவையை சேர்ந்த சிவசங்கர், கிளைக் கழக செயலாளர் நாகராஜ், லோகநாதன், ஜெயபால், பெரியார் நகர் கருணாநிதி, கேசவன், குமார், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
































































