பெங்களூரு, ஆக. 3: பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை திறப்பு தினமான ஆக. 9 ஆம் தேதி, அனைவரும் ஓர் அணியாக திரண்டு சிறப்பாக கொண்டாட என்று விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.
பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைத்த தினமான ஆக. 9 ஆம் தேதியன்று, சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) மாலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ், பெங்களூர் அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை 2009 ஆண்டு ஆக. 9 ஆம் தேதி பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு அமைக்கப்பட்டது. இதற்கு அரும்பாடு பட்ட அன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் மு.கருணாநிதி, கர்நாடகத்தின் அன்றைய முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவள்ளுவர் சிலை நிறுவிய தினமான ஆக. 9 ஆம் தேதியன்று, தமிழர்கள் மட்டுமின்றி, பிற மொழியினரும், ஜாதி, மதம், மொழி கடந்து தமிழர்களும் ஓர் அணியில் திரண்டும் வந்து, திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி, மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாட வேண்டும்.

அன்று காலை 10 மணியளவில், மாலை அணிவித்த பின்னர், கவிஞர் ராம இளங்கோவன் தலைமையில், கவிரங்கம் நடைபெற உள்ளது. இதில் திருவள்ளுவர், திருக்குறள் பற்றிய பெருமைகளை கவிஞர்கள், கவிதையாக படிப்பார்கள். நிகழ்வில் கர்நாடகத்தின் மூத்த தலைவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழ் அறிஞர்களை அழைக்கவும் முடிவு செய்துள்ளோம்.
ஜன. 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை நாம் தொடர்ந்து மிகச் சிறப்பாக கொண்டாடி வந்தாலும், அதைப் போலவே திருவள்ளுவர் சிலை நிறுவிய தினத்தையும் மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும். அந்த தினம் விடுமுறை தினம் என்பதால், தமிழர்கள் பெருமளவில் ஒன்று திரள வேண்டும் என்றார்.

பேட்டியின் போது பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் நிர்வாகிகள் விநாயகம், வா.ஸ்ரீதரன், கோபிநாத் மற்றும் கவிஞர் ராம.இளங்கோவன், கபிலன், திருமலை உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள், மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.































































