பெங்களூரு, செப். 27: மைசூர் திவான்களாக 6 தமிழர்கள் இருந்த நிலையில், இன்று எம்எல்ஏவாக ஒருவர் கூட தமிழர்கள் யாருமில்லை என்பது வேதனை அளிக்கிறது என்று தாய் மொழிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவருமான முனைவர் எஸ். டி. குமார் தெரிவித்தார்.
பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில் மைசூரு ராஜ்ய தமிழ் திவான்களுக்கு (பிரதமர்கள்) புகழ் வணக்கம் மற்றும் கர்ம வீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. எஸ். டி. குமார் தலைமையில் மைசூர் திவான்கள் படத்தை தினேஷ் குண்டுராவ் திறந்து வைத்தார். கர்ம வீரர் காமராஜரின் திரு உருவப்படத்தை, மதுசூதன பாபு அவர்களும், பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்தை இராமசாமி அவர்களும் திறந்து வைத்தனர்.

நிகழ்வில் எஸ். டி. குமார் அவர்கள் பேசியது: செட்டிப்புண்ணியம் வீரபள்ளி ரங்காச்சாரலூர் இவர் சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகளை ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த தமிழர். இவர் 1881 முதல் 1883 வரை மைசூர் அரசின் திவான் ஆக பணியாற்றினார். இவர் திவான் பொறுப்பு ஏற்கும் போது மைசூர் அரசு ரூ.8 லட்சம் கடனாளியாக இருந்தது இவர் நிர்வாகத்தை சீர்திருத்தி நிர்வாகத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சந்தன மர விற்பனை தடையை நீக்கி அவைகளை எல்லாம் விற்பனை செய்து, மைசூர் ராஜ்யத்தின் கடனை தீர்த்தவர்
சார் குமாரபுரம் சேஷாத்திரி ஐயர் 1883 முதல் 1901 வரை நீண்ட கால திவானாக மைசூர் அரசில் பணியாற்றியவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹரத்தை பூர்வீகம் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பாலகாட்டு குமாரபுரத்தில் பிறந்த தமிழ் குடும்பத்தைச் சார்ந்த ஐயர். இவர் நவீன பெங்களூரை கட்டமைத்த பெருமைக்குரியவர். 1899 இல் சிவசமுத்திர நீர்மின் திட்டத்தை பிரிட்டிஷாரிடம் அன்பாக பேசி தங்க வயலுக்கு மின்சாரத்தை கொண்டு வந்தவர். 1890 ஆம் ஆண்டு விக்டோரியா மருத்துவமனையை கொண்டு வந்தவர்.

1889 ஆண்டில் லால்பாக்கிலுள்ள புகழ்பெற்ற கண்ணாடி மாளிகையை உருவாக்கியவர் இவரே. 1898 ஆம் ஆண்டில் பிளேக் நோய் ஏற்பட்டு பெங்களூர் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியது அதை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பெங்களூரில் பசுவனகுடி சாம்ராஜ்நகர் பேட்டை சேஷாத்திரிபுரம் மல்லேஸ்வரம் போன்ற புறநகர் பகுதிகளை உருவாக்கிய பெருமைக்குரியவர். இக்காலத்தில் தான் மைசூர் யூனிவர்சிட்டி கொண்டு வரப்பட்டது. இவருடைய பெயரில் கப்பன் பூங்காவில் இன்றும் நூலகம் இருக்கிறது. இவருடைய சிலையும் அங்கே நிறுவப்பட்டு இருக்கிறது
திவான் சார் தி ஆர் ஏ தம்பு செட்டி இவர் திருச்சியில் பிறந்தவர் கிறிஸ்துவ தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் இவர் சேஷாத்ரி ஐயர் உடல்நலம் குன்றிய காலங்களில் இடைக்கால திவான் ஆக சில காலம் பணியாற்றியவர். மைசூர் தலைமை நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் பொறுப்பு வகித்தவர்.

திவான் தஞ்சை ஆனந்தராவ். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழர் பிராமண வகுப்பை சார்ந்தவர் இவருடைய பெயரிலேயே தஞ்சை ஆனந்தராவ் என்று வரும். 1909 முதல் 1912 வரை மைசூர் திவானாக இருந்தபோது 1910இல் சிவசமுத்திரத்தில் மின் நிலையத்திற்காக நீர் தேக்கத்தை கட்டியவர். அதே ஆண்டு மைசூரில் பொருளாதாரம் மாநாடு நடத்தி மைசூர் ராஜ்யத்தின் பொருளாதாரத்தை உயர்த்தியவர்.
1911/12 ஆம் ஆண்டில் கண்ணம்பாடியில் காவேரி ஆற்றில் கே ஆர் எஸ் அணைக்கட்டும் பணியை தொடங்கியவர் 1909இல் சர் எம் விஸ்வேஸ்வரயாவை மைசூரின் தலைமை பொறியாளராக நியமித்தார். அதன் பிறகு கே ஆர் எஸ் அனைத்து திட்டத்தை வடிவமைக்கும் பணியிலே அவரை சேர்த்தார். மின்டோ என்று சொல்லப்படுகின்ற கண் மருத்துவமனை இவரது பெயரில் பெங்களூரில் உருவாக்கப்பட்டது

திவான் பகதூர் டாக்டர் சார் ஆற்காடு ராமசாமி முதலியார். இவர் ஆற்காட்டில் லட்சுமணசாமி முதலியாருடன் இரட்டை பிறவியாக பிறந்தவர். 1917 ஆம் ஆண்டு நீதி கட்சியில் பொதுச் செயலாளராக இருந்தவர். சமூக சீர்திருத்தவாதி பிராமணர்கள் இல்லாத பிற சமூகத்தை கட்டமைக்க பாடுபட்டவர். சிறந்த பேச்சாளர் இவர் மைசூர் திவானாக 1946 முதல் 1949 வரை இருந்தபோது, 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது அப்போது மைசூர் ராஜ்யத்தை சுதந்திர இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று அப்போதைய மகாராஜாவுக்கு ஆலோசனை கூறி, மைசூர் ராஜ்யத்தை சுதந்திர இந்தியாவில் இணைத்த பெருமைக்குரிய தமிழர்.
இப்படி மைசூர் ராஜ்ஜியத்தில் 6 பிரதமர்கள் அந்தஸ்த்தில் தமிழர்கள் இருந்த நிலை மாறி, இன்று ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்பது வேதனையாக உள்ளது என்று எஸ். டி. குமார். பேசினார். நிகழ்வில் சரவணன், பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ், பிரபாகரன், ரங்கநாதன், இரா.வினோத், கோபி ஏகாம்பரம், இராஜசேகர், முனுசாமி உள்ளிட்ட திருவள்ளுவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





























































