பெங்களூரு, ஆக.18: வேலைகொடுப்பவர்களாக மாறுவதே இளைஞர்களின் இலக்காக இருக்க வேண்டும் என்று அரிமா சங்க ஆளுநர் டாக்டர்.ஜி.மோகன் தெரிவித்தார்.
லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி, கர்நாடகத்தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், அரிமா கேபிட்டல் பெங்களூரு, தமிழ்நாடு அரசின் டான்சம் ஜிசிசி நிறுவனத்தின் கூட்டுமுயற்சியில் பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தில் உள்ள சாய்பாபாநகர் நலச்சங்க அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமான வேலைவாய்ப்புமுகாம் நடந்தது. இந்த முகாமை அரிமா சங்கத்தின் 317ஏ மாவட்டத்தின் ஆளுநர் டாக்டர்.ஜி.மோகன் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார்.
லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி செயலாளர் அ.மதுசூதனபாபு தலைமையில் நடைபெற்றவிழாவில் கர்நாடக சிறுதொழில் சங்கத்தின் பொருளாளர், தமிழ்நாடு அரசின் டான்சம் ஜிசிசி நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர்.எல்.ஷாநவாஸ்கான், அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் சாரதாமோகன், ராஜேஷ், அனிதா ஜெய்சங்கர், யோகலட்சுமி, மாலாஸ்ரீ, என்.ராமச்சந்திரன், எஸ்.நவீன், தொழிலதிபர்கள் தர்மலிங்கம், சுரேஷ்குமார், கர்நாடகமாநில திமுக அமைப்பாளர் ந.ராமசாமி, திமுக இலக்கிய அணிச்செயலாளர் போர்முரசு கதிரவன், பாரதிதாசன் தமிழ் மறுமலர்ச்சி மன்றத்தலைவர் மா.கார்த்தியாயினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை ஜே.என்.எல். அறக்கட்டளை தலைவர் சித்ரா தொகுத்து வழங்கினார். கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் பொருளாளர் க.தினகரவேலு அனைவரையும் வரவேற்க, முனுசாமி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் அரிமா ஜி.மோகன் பேசுகையில்,”மனிதவளத்தை முறையாக பயன்படுத்தி, குடும்பம், சமூக, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது. வேலை செய்கிற இடத்தில் உண்மையாக உழைக்க வேண்டும். வேலைக்கு சேர்ந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்பங்களை முழுமையாக கற்றுத்தேர்ந்து, சொந்தமாக தொழில் செய்ய பழக வேண்டும். வாழ்நாள் முழுவதும் வேலையாளாக இருக்கக்கூடாது.ஒரு கட்டத்தில் வேலை கொடுக்கும் தொழில்முனைவோராக உருவெடுக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் ஏராளமான உள்ளன. புதிய தொழில்முனைவோருக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்றார்.
வேலைவாய்ப்புமுகாமில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் 193 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு, வேலை ஆணைகள் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்புமுகாமில் உள்நாட்டு, வெளிநாட்டு வேலைகளுக்கு நேர்காணல்கள் நடத்தப்பட்டன. பெங்களூரில் 3 மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக டான்சம் ஆலோசகர் டாக்டர்.ஷாநவாஸ்கான் தெரிவித்தார்.































































