முகப்பு Uncategorized பட்டியலின உள் ஒதுக்கீட்டால் ஆதிதிராவிடர்களுக்கு கடும் பாதிப்பு: கர்நாடக‌ அரசை கண்டித்து மார்ச் 25ல் பெங்களூரில்...

பட்டியலின உள் ஒதுக்கீட்டால் ஆதிதிராவிடர்களுக்கு கடும் பாதிப்பு: கர்நாடக‌ அரசை கண்டித்து மார்ச் 25ல் பெங்களூரில் மாநிலம் தழுவிய போராட்டம்

86
0

பெங்களூரு, மார்ச் 24: பட்டியலின உள் ஒதுக்கீடு காரணமாக கர்நாடகாவில் ஆதி திராவிடர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து மைசூரு, ஷிமோகா, சாம்ராஜ்நகர், குல்பர்கா உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

கடந்த 2024ம் ஆண்டு உச்சநீதிமன்றம், பட்டியல் வகுப்பில் உள்ள பின்தங்கிய சாதிகளுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கி உத்தரவிட்டது. இதற்கு முன்பே தமிழகத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள் ஒதுக்கீட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கர்நாடகாவில் அம்மாநில அரசு பட்டியலில் உள்ள 101 சாதிகளை எஸ்சி-ஏ, எஸ்சி -பி, எஸ்சி – சி ஆகிய 3 பிரிவுகளாக பிரித்துள்ளது. எஸ்சி – ஏ பிரிவில் மாதிகா, அருந்திதியர் உள்ளிட்ட சாதிகளும், எஸ்சி – பி ஹொலையா, ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிகளும், எஸ்சி – சி போவி, லம்பானி உள்ளிட்ட சாதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 17 சதவீத இட ஒதுக்கீட்டில் எஸ்சி – ஏ 6 சதவீதம், எஸ்சி – பி 6 சதவீதம், எஸ்சி – சி 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து 200 புள்ளிகளைக் கொண்ட இன சுழற்சி முறையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி – ஏ பிரிவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் முதல் இடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்சி – பி 14 இடமும், எஸ்சி – சி 21 இடமும் வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அரசின் இந்த முடிவால் எஸ்சி பி மற்றும் எஸ்சி சி பிரிவில் உள்ள 70க்கும் மேற்பட்ட சாதியினருக்கு கிடைக்க வேண்டிய கல்வி, வேலை வாய்ப்பு இடங்கள் பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்சி பி பிரிவில் இடம்பெற்றுள்ள‌ தமிழ்ப் பேசும் ஆதிதிராவிடர், பறையர், வள்ளுவர், சாம்பவர் உள்ளிட்ட சாதியினர் கடுமையாக பாதிக்கப்படுவதால், அம்மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

கர்நாடக அரசின் இந்த முடிவை கண்டித்து மைசூருவில் பல்கலை கழக பாபாசாகேப் அம்பேத்கர் மாணவ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாம்ராஜ்நகர், கொள்ளேகாலில் நடந்த போராத்தின்போது முதல்வர் சித்தராமையா, சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா ஆகியோரின் படங்களை தீயிட்டு கொளுத்தினர். ஷிமோகாவில் உள்ள ஆதிதிராவிடர் அமைப்பினர் இதனை கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பெங்களூரு மாநகராட்சியின் முன்னாள் மேயரும், அம்பேத்கர் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான சம்பத் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையுடன் கூடிய 3 சதவீத உள் ஒதுக்கீட்டால் அங்குள்ள பறையர் உள்ளிட்ட 76 சாதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் இந்த சாதியினருக்கு உயர் கல்வி நிலையங்களில் கற்கும் வாய்ப்பும், அரசு வேலை கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது.

தற்போது கர்நாடக அரசு இதே போன்ற அநீதியான இட ஒதுக்கீட்டை கர்நாடகாவில் அமல்படுத்தியுள்ளது. இதனால் இங்குள்ள எஸ்சிபி பிரிவில் உள்ள சுமார் 1.5 கோடியினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் பெரும் பாதகம் ஏற்படும். அதிலும் குறிப்பாக தமிழ் ஆதிதிராவிடர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கர்நாடகம் முழுவதும் சுமார் 60 லட்சம் பேருக்கு உயர் கல்வி நிலையங்களில் கற்கும் உரிமையும், ஊக்க தொகையும், அரசு வேலை வாய்ப்பும் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும்.

கர்நாடக அரசு முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அவசர கதியில் மேற்கொண்ட இந்த முடிவால் பெரும்பான்மையாக வாழும் இந்த மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எஸ்சி பி பிரிவில் உள்ள மற்ற சாதிகளுடன் இணைந்து அரசுக்கு இந்த முறையை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளோம்.

கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் இந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சித்தராமையா தலைமையிலான மாநில அரசு இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அரசின் உள் ஒதுக்கீட்டை கண்டித்து மார்ச் 25 ஆம் தேதி பெங்களூரு சுதந்திரப்பூங்காவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது. இதில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டு, அரசுக்கு தங்களது உரிமையையும், எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்றார்.

பேட்டியின் போது பிபிஎம்பியின் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரா, ஆதிதிராவிட மகாசபையின் தலைவர் கிருஷ்ணன், பறையர் பேரவைத் தலைவர் கெம்பராஜ், சர்வக்ஞநகர் தொகுதி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் உதயகுமார் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்