முகப்பு Conference கன்னடர்களும், தமிழர்களும் அனைத்து துறைகளிலும் ஒன்று கூடி செயல்படவோம்: முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூப்பா

கன்னடர்களும், தமிழர்களும் அனைத்து துறைகளிலும் ஒன்று கூடி செயல்படவோம்: முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூப்பா

சிங்கப்பூர் மலேசிய தமிழர்களைப் போல் இந்த மண்சார்ந்து வாழ்வோம்-தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்டி குமார்.

110
0

பெங்களூரு, அக். 21: கன்னடர்களும், தமிழர்களும் அனைத்து துறைகளிலும் ஒன்று கூடி செயல்படவோம் என்று முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூப்பா தெரிவித்தாஅர்.

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழர், கன்னடர் ஒற்றுமை மாநாட்டில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பிஎஸ் எடியூரப்பா பேசுகையில் கர்நாடகத்தின் இனி கன்னடர்களும், தமிழர்களும் அனைத்து துறைகளிலும் ஒன்று கூடி செயல்படவோம் என்றார்.

கர்நாடகத்தில் கன்னடர்களும் தமிழர்களும் வேறல்ல. நாமெல்லாம் திராவிட குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். தென்னக்கத்தில் நம் மொழியை காக்க கன்னடர்கள் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என்று கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் டிஏ நாராயண கவுடா தெரிவித்தார்.

கர்நாடகத்தை பெங்களூரைக் கட்டுவதில் தமிழர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. அவர்களும் இந்த மாநிலத்தின் ஒரு அங்கமாக உள்ளனர் என்று சிவாஜிநகர் தொகுதி எம்எல்ஏ ரிஸ்வான் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் தமிழர்களுக்கு பாதுகாப்பாகவும், அரசின் அனைத்து துறைகளிலும் குறிப்பாக வேலை வாய்ப்பிலும் பொருளாதார வளர்ச்சியிலும் தாய்மொழி கூட்டமைப்பு உறுதுணையாக இருக்கும். சிங்கப்பூர் மலேசிய தமிழர்களைப் போல் இந்த மண்சார்ந்து வாழ்வோம் என்று தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்டி குமார் தெரிவித்தார்.

நிகழ்வில் பல்வேறு தமிழ் அமைப்பினர், தமிழர்கள், கன்னட ஆர்வலர்கள், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்ச் சங்கங்களுக்கு 2 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) உலகில் எந்த நாடு அல்லது இந்தியாவின் எந்த மாநிலத்தில் வாழ்ந்தாலும், அந்த மண்ணின் மக்களோடு இணக்கமாகவும், நட்பாகவும் வாழும் பண்புடைய தமிழ் மக்கள், தமது மொழி, இலக்கியம், கலை, கலாச்சாரத்தை பேணி பாதுகாப்பதோடு, உள்ளூர் மக்களின் மொழி, இலக்கியம், கலை, கலாச்சாரம் போன்ற கூறுகளை வளர்ப்பதற்கு பெரும் பங்காற்றும் தன்மை கொண்டவர்கள். கருநாடகத்தில் வாழும் தமிழர்கள், கன்னட மக்களின் உணர்வோடு இரண்டற கலந்திருப்பதால், கன்னடமொழி, இலக்கியம், கலை, கலாசாரத்தை பேணி பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் தமிழர்கள் பெரும் பங்காற்றி வருகிறார்கள். இங்கு வாழும் தமிழ் மக்களோடு நட்பு பாராட்டி, நல்லுறவோடு வாழ்ந்து வரும் கன்னடப் பெருங்குடி மக்களுக்கு இந்த மாநாடு உள்ளன்போடு நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

2) கருநாடகத்தின் மொழி, நிலம், நீர், எல்லை, வேலைவாய்ப்பு போன்ற மாநில உரிமைகளை தற்காத்துக்கொள்ள கன்னடர்கள் முன்னெடுக்கும் எல்லா முயற்சிகளிலும் கருநாடகத் தமிழர்கள் பெரும் துணையாக இருப்பார்கள். காவிரி நீர்ப்பங்கீட்டு பிரச்சனை, மேக்கேதாட்டு அணை பிரச்சனை, பெலகாவி எல்லை பிரச்சனை, மகதாயி நீர்ப்பங்கீட்டு பிரச்சனை போன்றவற்றில் கருநாடகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட‌ வேண்டும். அந்த உரிமைகளை நிலைநாட்டுவதற்கு கருநாடக அரசும், கன்னட மக்களும் முன்னெடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் கருநாடகத் தமிழர்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு மீண்டும் மீண்டும் அறுதியிட்டு உறுதி செய்கிறது.

3) கருநாடகத்தில் வைக்கப்படும் பெயர்ப்பலகைகளில் கன்னடமொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கருநாடக அரசின் உத்தரவுக்கு இணங்க‌ 60 சதம் அளவில் கன்னட எழுத்துகளில் பெயர்கள் எழுதப்பட வேண்டும் என்று வணிக, தொழில், கல்வி, மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

4) தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டமசோதாவை உடனடியாக அமல்படுத்துமாறு கருநாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

5) கருநாடகத்தில் செயல்படும் கேந்த்ரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் கட்டாயக் கன்னடப் பாடத்தை தீவிரமாக அமல்படுத்துமாறு மத்திய, மாநில‌ அரசுகளை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
6) பிறமொழியை சேர்ந்த அமைப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் மற்றும் சலுகைகளை கருநாடகத் தமிழர்களுக்கும் வழங்க வேண்டுமென கருநாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

7) வங்கிகள், அஞ்சலகங்கள், வருமானவரித்துறை, தொழிற்சாலைகள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

8) கருநாடகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் தமிழ்க் கல்வெட்டுகளை சிதைக்க முற்படும் சமூகவிரோதிகளின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கருநாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

9) பள்ளிகளில் மூன்றாம்மொழியாக தமிழ்மொழிப்பாடத்தை கற்பிக்கவும், பாடப்புத்தகத்தை தயாரிக்கவும், தேர்வு நடத்தவும் அனுமதி அளித்து ஏற்கெனவே பிறப்பித்திருக்கும் உத்தரவை நடப்பு கல்வி ஆண்டிலேயே செயல்படுத்துமாறு கருநாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

10) தென்கன்னட மாவட்டத்தின் சுள்ளியா பகுதியில் தேயிலை, காபி, ரப்பர் தோட்டத்தில் கடினமான சூழலில் பணியாற்றி, வீடில்லாமல் தவித்து வரும் தமிழர்களுக்கு கருநாடக வீட்டுவசதி வாரியத்தின் மூலம் உடனடியாக வீட்டுவசதிகளை செய்து தருமாறு கருநாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

11) கருநாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் நிலவி வரும் பாரபட்சத்தை களைந்து, உரிய ஜாதி சான்றிதழை உடனடியாக வழங்க ஆவன செய்யுமாறு கருநாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

12) போதுமான மாணவர்கள் இல்லை என்ற காரணத்தை கூறி, அரசு நடத்தி வரும் தமிழ்ப்பயிற்றுமொழி பள்ளிகளை மூடக்கூடாது என்று கருநாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

13) தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி, அரசு தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்களை வேற்றுமொழி பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கருநாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

14) அரசு தமிழ்ப்பள்ளிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்களுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கும்படி கருநாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

15) அரசு நடத்தும் உருது, தெலுங்கு, மராத்தி பயிற்றுமொழி பள்ளிகளில் நடைமுறையில் இருப்பது போல, அரசு தமிழ்ப்பள்ளிகளிலும் ஆங்கிலப்பயிற்றுமொழி வகுப்புகளை உள்ளடக்கிய இருபயிற்றுமொழி பள்ளிகளை தொடங்க கர்நாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

16) அரசு நடத்திவரும் ஆங்கிலப்பயிற்றுமொழி பள்ளிகளில், விரும்புவோருக்கு மொழிப்பாடமாக தமிழை அறிமுகம் செய்ய கருநாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

17) அரசு தமிழ்ப்பள்ளிகளில் மாலைநேரத்தில் தமிழ் மற்றும் கன்னடமொழியை கற்றுத்தருவதற்கு தமிழ் அமைப்புகளுக்கு அனுமதி அளிக்குமாறு கருநாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

18) கருநாடக உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக கன்னடத்தை ஏற்று, அதை உடனடியாக செயல்படுத்துமாறு மத்திய அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

19) கருநாடக சிறுபான்மையினர் நலத்துறையை கருநாடக மத மற்றும் மொழி சிறுபான்மையினர் நலத்துறை என்று பெயர்மாற்றம் செய்ய கருநாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

20) கோலார் தங்கவயலில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த தங்கச்சுரங்கம் மூடப்பட்டுள்ளதால், அதனால் வேலையிழந்த தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய தொழிற்சாலையை திறக்குமாறும், மூடப்பட்ட தங்கச்சுரங்கத்தை தன் பொறுப்பில் ஏற்று மீண்டும் திறக்குமாறும் கருநாடக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

21) கருநாடகத் தமிழர்களுக்கு தத்தமது கட்சிகளில் முக்கிய பொறுப்புகளையும், பதவிகளையும் வழங்கி வரும் அரசியல் கட்சிகளை பாராட்டுவதோடு, அரசியல் நடவடிக்கைகளில் தமிழர்களை அதிக அளவில் ஈடுபடுத்துமாறு கருநாடக அரசியல் கட்சிகளை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தீர்மானங்கள்:

22) வாழ்வாதாரத்திற்காக தாய்மண்ணில் இருந்து புறப்பட்டு, வெளிமாநிலங்களில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சத இடஒதுக்கீடை வழங்க சிறப்பு சட்டமசோதாவை கொண்டுவருமாறு தமிழ்நாடு அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

23) தமிழ்மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து, வளர்த்தெடுக்கும் நோக்கில், அரங்கம், நூலகம் உள்ளிட்டவை இடம்பெறும் அயலகத்தமிழர் பண்பாட்டு மையத்தை பெங்களூரில் அமைத்திடுமாறு தமிழ்நாடு அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

24) தமிழ் நாட்டு அரசு புதிதாக தொடங்கி சிறப்பாக நடத்தி வரும் அயலகத்தமிழர் நலத்துறையின் கிளையை பெங்களூரில் தொடங்கி, அதன் வழியே அயலகத்தமிழர் நலத்திட்டங்களை செயல்படுத்துமாறு தமிழ்நாடு அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

25) உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு அரசு நிறுவி இருப்பது போல, கருநாடகத் தமிழர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைத்திடுமாறு தமிழ்நாடு அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

26) தமிழ்நாட்டு இதழாளர்களுக்கு வழங்கப்படும் வீட்டுவசதி, பேருந்தில் இலவசப்பயணம், காப்பீட்டு திட்டங்கள், ஓய்வூதியம் போன்ற அனைத்து அரசு சலுகைகளையும் கருநாடகத்தில் பணியாற்றி வரும் தமிழ் இதழாளர்களுக்கும் விரிவுப்படுத்துமாறு தமிழ்நாடு அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

27) கருநாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்மொழியை கற்றுத்தர ஆங்காங்கே செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகளுக்கு மானிய உதவிகளை வழங்குமாறு தமிழ்நாடு அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
கருநாடகத்தமிழர்களை வலியுறுத்தும் தீர்மானங்கள்.

28) தாய்மொழியாம் தமிழ்மொழியுடன் வாழ்விடமொழியான கன்னடத்தை கட்டாயம் கற்க வேண்டும் என்று கருநாடகத் தமிழர்களை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

29) கன்னடர்களோடு நல்லிணக்கமாக வாழ்வதற்கு பாலமாக திகழும் கன்னடக்கவிஞர், சமத்துவ அறிஞர் சர்வக்ஞரின் பிறந்தநாளை கருநாடகத்தமிழர்கள் ஆண்டுதோறும் கொண்டாட இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

30) தமிழர்கள் வாழும் மாவட்டங்களில் கன்னடர்-தமிழர் இடையே நிலவும் நல்லிணக்கத்தையும், ஒருங்கிணைப்பையும் உறுதி செய்ய மாவட்ட அளவிலான கன்னடர்-தமிழர் ஒற்றுமை மற்றும் கலாச்சார மாநாடுகளை நடத்த இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

31) கருநாடகத் தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழர்களின் முழுமையான ஒத்துழைப்போடு, ஆங்காங்கே கடன் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க இந்த மாநாடு ஒருமனதாக தீர்மானிக்கிறது.

32) கருநாடகத்தில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வியல் சார்ந்த‌ தகவல்கள் முழுமையாக கிடைக்காததால், தமிழர்களின் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வியல் கணக்கெடுப்பு நடத்த இந்த மாநாடு ஒருமித்த கருத்தோடு முடிவு செய்கிறது.

33) பெங்களூரில் திருவள்ளுவர் சிலை நிறுவ‌ப்பட்ட ஆகஸ்ட் 9ஆம் தேதியை ஆண்டுதோறும் கன்னடர்-தமிழர் நல்லிணக்க‌ நாளாக கொண்டாட இந்த மாநாடு ஒருமனதாக தீர்மானிக்கிறது.

34) சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களைப் போல், கருநாடகத்தில் வாழும் தமிழர்களுக்கென கன்னட மண்சார்ந்த தமிழர் அரசியலை முன்னெடுக்குமாறு தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

35) கருநாடகத்தில் தமிழ்மொழியை காப்பாற்ற கோலார் தங்கவயலில் உயிர்த்தியாக‌ம் செய்த நெஞ்சுரமிக்க‌ தமிழ் வீரர்கள் திரு.பரமேஷ், திரு.மோகன், திரு.பால்ராஜ், திரு.உதயகுமார் ஆகியோருக்கு இந்த மாநாடு வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்