பெங்களூரு, ஜூலை 20: கர்நாடக மாநில மக்கள் தலைநிமிரும் வகையில் ஏழாவது உலக திருக்குறள் மாநாட்டை சிறப்பாக நடத்தி உள்ளோம் என்று பெங்களூர் திருவள்ளூர் சங்கத்தின் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு தலைவருமான முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.

பெங்களூரில் ஏழாவது உலக திருக்குறள் மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் இவ்வாறு பேசினார்.

பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்ச்சர் தொழில்நுட்ப வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) பெங்களூர் திருவள்ளூர் சங்க தலைவரும் தாய்மொழி கூட்டமைப்பு தலைவருமான முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் எஸ்.டி.குமார் பாராட்டி, சிறப்பு செய்தார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும், ஏழாவது உலக திருக்குறள் மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்காக முனைவர் எஸ்.டி.குமாருக்கு சிறப்பு செய்தனர்.

கூட்டத்தில் பேசிய எஸ்.டி.குமார், கடந்த ஜூலை 5 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டை கர்நாடக மாநில மக்கள் அனைவரும் தலைநிமிரும் வகையில் சிறப்பாக நடத்தி உள்ளோம். இது கர்நாடக தமிழர்கள் உள்ளிட்ட, மாநில மக்கள் அனைவரும் பெருமை சேர்ப்பதாகும்.

மாநாட்டை தடுப்பதற்கு ஒரு சிலர் சூழ்ச்சி செய்தாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் அலை அலையாக மாநாட்டிற்கு வந்து, அதனை வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக ஆக்கியுள்ளனர். மாநாட்டிற்கு வந்து, அதில் எள்ளளவும் பிரச்னை ஏற்பாடாமல், கட்டுப்பாட்டுடன், கட்டுக் கோப்புடன் நடந்து கொண்ட தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாட்டு வெற்றி, எனது தமிழ்ப் பணியை தொடர்ந்து செய்திட ஊக்கம் அளித்துள்ளது. இனி வரும் கூட்டங்களில் பல ஆயிரம் மக்கள் திரண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொள்வேன். மாநாட்டிற்கு பெரும் துணையாக நின்ற அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலந்து கொண்ட அனைவரும் என்னை பாராட்டி, சிறப்பு செய்துள்ளது நெகிழச் செய்துள்ளது. இதனை நான் என்றும் மறவேன் என்றார்.































































