பெங்களூரு, மே 31: விதான சவுதாவை வடிவமைத்த கட்டிடக்கலை பொறியாளர் தமிழர் பி.ஆர்.மாணிக்கம் அவர்களின் 60 ஆம் ஆண்டு நிறைவு நினைவேந்தல் பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில் அதன் தலைவர் முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் ராஜாஜிநகர் தொகுதி எம்எல்ஏ சுரேஷ் குமார், பி. ஆர்.மாணிக்கம் அவர்களின் மகன் பி.எம்.சீனிவாசன் அவரது துணைவியாருடன் கலந்து கொண்டார். பி.ஆர்.மாணிக்கம் அவர்கள் கர்நாடக மாநிலத்தில் பொறியாளராக இருந்து கட்டப்பட்ட விதான சவுதா உட்பட ஏராளமான கட்டிடங்கள் பற்றிய தொகுப்பு காட்சி வீடியோ படமாக ஒளிபரப்பப் பட்டது. நிகழ்வில் பேசிய எம்எல்ஏ சுரேஷ்குமார் அவர்கள், மாணிக்கம் அவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.
திருவள்ளுவர் சங்கத் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எஸ்.டி.குமார் அவர்கள் பேசும் போது, கர்நாடக மாநில வளர்ச்சிக்கு தமிழர்கள் அரும்பாடுபட்டுள்ளனர். அதற்கு எடுத்துக் காட்டாக கூற வேண்டும் என்றால் விதான சவுதாவை வடிவமைத்த கட்டிடக்கலை பொறியாளர் பி.ஆர்.மாணிக்கம் அவர்களை கூறலாம். இவரை போல எண்ணற்ற தமிழர்கள் பெங்களூர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

இப்படி தொடர்ந்து கர்நாடக மாநில வளர்ச்சியின் தமிழர்களின் பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அமரர் மாணிக்கம் அவர்கள் இந்த கர்நாடக மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இந்த மண்ணுக்கு விசுவாசமாக இருந்து, இந்த கர்நாடக மண்ணிலேயே உயிர் நீத்தவர். அவரை போலவே, இந்த மண்ணுக்கு என் போன்ற, எண்ணற்ற தமிழர்கள் விசுவாசமாக கன்னடர் தமிழர் உறவோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இந்த நேரத்தில் தொடர்ந்து இந்த மண்ணுக்கு பாடுபட்டு வந்தவர்கள், வருகின்றவர்கள் அனைவருக்கும் எனது நல் வணக்கத்தை செலுத்தி, தமிழர் பி.ஆர்.மாணிக்கம் அவர்களுக்கு நன்றி கடன் செலுத்த வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.
நினைவேந்தலில் திருவள்ளுவர் சங்க ஒட்டுமொத்த நிர்வாகிகள், பிரபாகரன். முத்துமணி நன்னன், செந்தில்குமார், சடகோபன், சந்திர மௌளி, இராஜசேகர், குணசேகரன். பார்த்திபன். முதலியார் சங்க பிரமுகர்கள், உட்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள்.தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்கள் என தமிழர்கள் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார்கள்.































































