முகப்பு Bengaluru பெங்களூரில் முதல் முறையாக தேசிய ஓவியக்கலை திருவிழா

பெங்களூரில் முதல் முறையாக தேசிய ஓவியக்கலை திருவிழா

76
0

பெங்களூரு, மே 31: பெங்களூரில் முதல்முறையாக, தேசிய ஓவியக்கலை திருவிழா நடைபெற்றுவருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட‌ ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.

கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் பெங்களூரு, குமாரகுருபா சாலையில் உள்ள சித்ரகலா பரிஷத் வளாகத்தில் மே 28ஆம் தேதி தொடங்கி, 5 நாள் தேசிய ஓவியக்கலை திருவிழா நடைபெற்றுவருகிறது. பெங்களூரில் முதல்முறையாக நடத்தப்படும் இந்த திருவிழாவில் 96 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் அதிகமான ஓவியர்களின் கலைப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, சென்னை போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாரதிசெந்தில்வேலன், அம்பிகாசங்கர், பாலசுப்ரமணியன், என்.கே.பாஸ்கரன், சி.முல்லைராஜன், கயல்விழி சேதுக்கரசு, மனோகர் நடராஜன், மீனாகணேஷ், மெய்யப்பன், ரவிராஜா, ரவிராம், இளையபாரதி, இளையராஜா, இளஞ்செழியன், விமலநாதன், எஸ்.சிவபாலன், வாசுதேவன் அண்ணாமலை, வேல்ராஜ், கே.வி.கம்பர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஓவியர்களின் ஓவியங்கள், சிற்பங்கள், கலைப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கர்நாடக சித்ரகலா பரிஷத் இணைச்செயலாளர் சந்திரசேகர் கூறுகையில்,”பெங்களூரில் முதல்முறையாக தேசிய ஓவியக்கலை திருவிழா நடத்தப்படுகிறது. நவீன‌ ஓவியங்கள் மட்டுமல்லாது, பாரம்பரிய ஓவியங்களையும் காட்சிப்படுத்தும் முயற்சியாகும் இது. புத்தாக்கப்படைப்புகளை மக்களிடையே கொண்டு சேர்க்க மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஓவியர்கள் பங்கேற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல், கலைப்படைப்புகள் குறித்து நவீனத்தன்மைகள், புதுமைகள் குறித்து கலந்துரையாடவும் கருத்தரங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக சித்ரகலா பரிஷத்தின் 60 ஆண்டுகால வரலாற்றில் தேசிய அளவில் நடத்தப்படும் முதல் ஓவியக்கலை திருவிழா இதுவாகும். 5 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கட்டணம் எதுவும் இல்லை. ஓவியர்களின் ஆயிரக்கணக்கான ஓவியங்களை வாங்கிச்செல்லவும் வாய்ப்புள்ளது. ஓவியக்கலையை ஊக்குவிக்க பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். ஜூன் 1ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக அரங்குகள் திறந்திருக்கும்” என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்