பெங்களூரு, ஜன. 22: சர்வதேச ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் (IIHM), உலகின் மிகப்பெரிய மாணவர் சமையல் கலைஞர்களின் சங்கமமான ‘ஐஐஎச்எம் சர்வதேச இளம் சமையல் கலைஞர் ஒலிம்பியாட்’ (YCO) போட்டியின் 12-வது பதிப்பை பிப்ரவரி 1 முதல் 6 வரை நடத்தவுள்ளது. உலகப்புகழ் பெற்ற இந்த சமையல் ஒலிம்பியாட்டின் தொடக்க விழா முதல் முறையாக பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இதன் இறுதிப் போட்டி பிப்ரவரி 6-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும்.
‘ஐஐஎச்எம் சர்வதேச இளம் சமையல் கலைஞர் ஒலிம்பியாட் 2026’, 50 நாடுகளைச் சேர்ந்த ஹோட்டல் மேலாண்மை மற்றும் சமையல் கல்வி நிறுவனங்களின் மாணவர்களை ஒன்றிணைக்கிறது. இது உணவை நாடுகள், கலாச்சாரங்கள் மற்றும் எதிர்கால விருந்தோம்பல் தலைவர்களுக்கு இடையிலான ஒரு பாலமாக மாற்றுகிறது.
ஒய்சிஓ 2026 மீண்டும் இந்தியாவை இந்த உலகளாவிய பரிமாற்றத்தின் மையப்புள்ளியாக மாற்றும். பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், போட்டி சமையலறைகளையும் தாண்டி இந்திய உணவு வகைகள், பிராந்திய பொருட்கள், சமையல் மரபுகள் மற்றும் உள்ளூர் கலாச்சார நடைமுறைகளை ஆழமாக அறிந்துகொள்வார்கள். இந்த ஒலிம்பியாட் முதல் சுற்றில் ஐந்து இந்திய நகரங்களில் நடைபெற்று, கொல்கத்தாவில் உள்ள ஐஐஎச்எம்மின் உலகளாவிய வளாகத்தில் (Global Campus) மகா இறுதிப் போட்டியுடன் நிறைவடையும்.

இந்த நிகழ்வு குறித்து ஐஐஎச்எம் மற்றும் இன்டிஸ்மார்ட் குழுமத்தின் (Indismart Group Worldwide) தலைவரும் முதன்மை ஆலோசகருமான டாக்டர் சுபோர்னோ போஸ் கூறுகையில், “இளம் சமையல் கலைஞர் ஒலிம்பியாட் என்பது வெறும் போட்டி மட்டுமல்ல; இது திறமை, ராஜதந்திரம் மற்றும் கற்றலுக்கான உலகளாவிய மேடை. இந்த பயணத்தில், இளம் சமையல் கலைஞர்கள் உணவு, கலாசாரம் மற்றும் ஒத்துழைப்புக்கான உலகளாவிய தூதர்களாக மாறுகிறார்கள்,” என்றார்.
ஒய்சிஓ கருப்பொருள்: “ஏஐ மூலம் உலகின் உலகளாவிய சமையல் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்” இந்த 12-வது பதிப்பின் கருப்பொருளான “செயற்கை நுண்ணறிவு மூலம் உலகின் உலகளாவிய சமையல் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்” என்பதை அறிவித்த டாக்டர் போஸ், “தொழில்நுட்பம், தலைமைத்துவம், நெறிமுறைகள் மற்றும் உலகளாவிய ஒற்றுமை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை இது திறக்கிறது” என்று குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு, பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட சமையல் ஆவணங்கள் (Culinary Dossiers) வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு நாட்டிற்கும் என தனித்தனியான சமையல் பாரம்பரிய ஜிபிடிகளை (Culinary Heritage GPTs) ஐஐஎச்எம் உருவாக்கியுள்ளது. இது அந்தந்த நாடுகளின் சமையல் வரலாற்றுக்கு ஒரு நிரந்தர தகவல் தளமாக அமையும்.

ஒய்சிஓ 2026-ல் செயற்கை நுண்ணறிவின் (AI) பங்கு ஐஐஎச்எம்-ஆல் உருவாக்கப்பட்ட ‘நமஸ்தே ஹாஸ்பிடாலிட்டி ஜிபிடி’ என்ற பிரத்யேக தொழில்நுட்பம், போட்டியாளர்களுக்கு மெய்நிகர் பயிற்சி (Virtual Coaching), நிலைத்தன்மை சார்ந்த சமையல் குறிப்புகள் மற்றும் நிகழ்நேர வழிகாட்டுதல்களை வழங்கும். இது மனித திறமைக்கு மாற்றாக அன்றி, அதை மேம்படுத்தும் கருவியாகச் செயல்படும்.
சர்வதேச விருந்தோம்பல் கவுன்சில் (IHC) லண்டனின் தலைவர் மற்றும் நடுவர் குழுத் தலைவர் டாக்டர் டேவிட் ஃபோஸ்கெட், ஒய்சிஓவை ‘சமையல் ராஜதந்திரத்தின்’ (Culinary Diplomacy) ஒரு அரிய எடுத்துக்காட்டு என்று விவரித்தார்.
பெங்களூரு: ஒலிம்பியாட்டின் நுழைவாயில் தொடக்க விழா பெங்களூருவில் நடைபெறுவதால், 50 நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள், வழிகாட்டிகள் மற்றும் நடுவர்கள் எனப் பலரும் மூன்று முதல் நான்கு நாட்கள் இங்கிருப்பார்கள். அவர்கள் பெங்களூருவின் கலாசாரம் மற்றும் உணவு மரபுகளை நேரடியாகக் காண்பார்கள்.

இளம் சமையல் கலைஞர்களின் ஐக்கிய உலகம் (United World of Young Chefs) போட்டிகளுக்கு அப்பாற்பட்டு, 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் சமையல் கலைஞர்கள் தங்களது நாட்டு உணவுகளைத் தயாரித்து வழங்கும் ‘யுனைடெட் வேர்ல்ட் ஆஃப் யங் செஃப்ஸ்’ (UWYC) என்ற கலாசாரக் கொண்டாட்டம் பெங்களூரு, டெல்லி, புனே, ஹைதராபாத் மற்றும் கோவா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.































































