பெங்களூரு, ஜன. 14: பெங்களூரு அல்சூரில் நடைபெறும் திருவள்ளுவர் தின விழாவில் கர்நாடக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளனர்.
பெங்களூரு அல்சூரில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே புதன்கிழமை (ஜன.15) ஆம் தேதி டாக்டர் பைப்பனஹள்ளி ரமேஷ் தலைமையில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்படுகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெறும் நிகழ்வில், திருக்குறள் முற்றோதல், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர், அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமதுகான், தினேஷ் குண்டுராவ், எம்எல்ஏக்கள் ரிஸ்வான் அர்ஷத், சீனிவாஸ், என்.ஏ.ஹாரீஷ், எம்.பி, பி.சி.மோகன் உள்ளிட்டோரும், இயக்குநர், பாடல் ஆசிரியர் கங்கை அமரன், இயக்குநர், நடிகர் சுந்தர்ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
நிகழ்வில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். அவர்கள் மட்டுமின்றி, கர்நாடகத்தில் உள்ள அனைத்து மதத்தினர், மொழியினர் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் கலந்து கொள்ள வேண்டும். அதோடு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட அண்மை மாநிலங்களில் வாழும் தமிழர்கள் திரளாக கலந்து கொண்டு, விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று பைப்பனஹள்ளி ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.































































