பெங்களூரு, பிப். 8: தமிழ் வளர தமிழ் நாளிதழ்கள் முக்கிய காரணம். தமிழர்கள் ஒவ்வொரு வீட்டிலும் தமிழ் நாளிதழ் படிக்க வேண்டும். அப்படி படித்தால் தான் நமது மொழி, பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்க முடியும் என்று பேராசிரியர் கு.வணங்காமுடி தெரிவித்தார்.
கர்நாடக மாநில தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி 7ம் தேதியை கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் தினமாக கொண்டாடி வருகிறது. அதன்படி இவ்வாண்டு விழா வெள்ளிக்கிழமை (பிப். 7) காலை 10 மணிக்கு பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள இன்ஸ்டியூஷன் ஆப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ்ட்ஸ் அரங்கில் நடைபெற்றது.

காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் ஆ.வி.மதியழகன், தினகரவேலு, வி.வெங்டேசன், தண்டபாணி முன்னிலையில் நடந்த கருத்தரங்கில் ‘தமிழ் இதழியல் ஏற்படவிருக்கும் செயற்கை நுண்ணறிவின் ஆக்கப்பூர்வ விளைவுகள்’ தலைப்பில் பிரபல எழுத்தாளர் என். சொக்கன் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசும்போது, இதழியல் வரலாறு கடந்த வந்த பாதைகளை எடுத்து கூறியதுடன் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி இதழியல் துறையில் மாற்றம் ஏற்படுத்தி வந்தாலும் வளர்ந்த நாடுகளில் உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் நமது இதழியலில் வளர்ச்சியை எட்டவில்லை. இருப்பினும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதழியல் துறையில் கால் பதித்துள்ளது. இதை மட்டுமே முழுமையாக நம்பக்கூடாது என்றார்.

அதை தொடர்ந்து கர்நாடக தமிழ் இதழியல் சாதனையாளர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர் கு.வணங்காமுடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வு சங்கத்துறை இயக்குனர் மாணிக்கவாசகம், பத்திரிக்கை இணை செய்தி ஆசிரியர் வா.சங்கர், கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, புலவர் கார்த்தியாயினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பா.இளவழகன், மதலைமணி, மு.வில்வபதி, மதியழகன், ப.தங்கமணி, க.தினகரவேலு, இராஜேந்திரபாபு ஆகியோருக்கு விருதை பேராசிரியர் கு.வணங்காமுடி வழங்கி பேசும்போது, ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக இருக்கும் ஊடகத்துறை சக்தி வாய்ந்த ஆயுதமாக உள்ளது. கடந்த 1942 முதல் 1962 ஆண்டு தமிழ் ஊடங்கள் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசியல் தலைவரும் தங்களுக்கென தனியாக வார, மாத இதழ்கள் நடத்தி வந்தனர். இது சமூகத்தில் பெரிய மாற்றம் ஏற்படுத்தியது. ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு நாளிதழ் இருக்கும். அதன் மூலம் தமிழ் வளர்ந்தது. தற்போது நாளிதழ் வாசிப்பு குறைந்ததால், தமிழ் மொழியின் வளர்ச்சியும் குறைகிறது. தமிழ்மொழி இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் உயிர்ப்புடன் வாழ வேண்டுமானால் ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் நாளிதழ் படிக்க வேண்டும் என்றார்.
விழாவை சங்க தலைவர் ந.முத்துமணி தொகுத்து வழங்கினார். விழாவில் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கொ.வி.நன்னன், கர்நாடக மாநில திராவிடமுன்னேற்ற கழக மாநில அமைப்பாளர் ந.இராமசாமி, பொருளாளர் கே.தட்சணாமூர்த்தி, முன்னாள் மாநில பொறுப்பு குழு உறுப்பினர் இரா.நாம்தேவ், நீலசந்திரா வார்டு செயலாளர் மு.மாணிக்கவேலு, சாம்ராஜ்பேட்டை வார்டு செயலாளர் நாகராஜ், கோ.கருணாநிதி, கவிப்பிரியா, பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், பாரி, தங்கவயல் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தீபம் சுப்ரமணி, எல்.திருமுருகன்,
உலக தமிழ் கழக தங்கவயல் கிளை தலைவர் துரைசெல்வன், வக்கீல் முனைவர் கே.ஸ்ரீதர், நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை நிர்வாகி இளங்கேஷ்வரன், எழுத்தாளர்கள் நித்யகல்யாணி, ஒளிமலரவன், கலைச் செல்வி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, ஆசிரியை ஜுவைரியா, விஜயபூபதி, ராஜகுரு, திருநாவுக்கரசு, ராஜசேகர், திருமலை, குணசேகர், ராவணன், உள்பட நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க துணைத்தலைவர் அ.செந்தில்நாதன் நன்றி கூறினார்.































































