முகப்பு Bengaluru தமிழ் என்பது ஒரு மொழியல்ல: இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

தமிழ் என்பது ஒரு மொழியல்ல: இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

163
0

பெங்களூரு, மார்ச் 16: தமிழ் என்பது ஒரு மொழியல்ல, அது வாழ்வியல் முறை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு தெரிவித்தார்.

பெங்களூரு ராஜாஜிநகர் வாஸன் கண் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் 3-ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா சிறப்புமலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் தமிழ் என்பது வெறும் ஒரு மொழியா?. தமிழ் உணவு முறை இருக்கிறது. தமிழ் மருத்துவம் இருக்கிறது. தமிழ் விவசாயமுறைகள், விளையாட்டுகள் இருக்கின்றன. ஜல்லிகட்டு உள்ளிட்ட தமிழ் வீர விளையாட்டுகள் இருக்கின்றன. தமிழ் உடை இருக்கிறது. தமிழ் என்பது ஒரு மொழியல்ல, அது வாழ்வியல் முறை ஆகும்.

அது போல ஒவ்வொரு மொழிக்கும் வேர் இருக்கும். இங்கே வா, அங்கே போ என்று குறுக்கிவிடக்கூடாது. அது கன்னடமாக இருக்கட்டும், தெலுங்கு, மலையாள மொழிகளாகட்டும். ஒவ்வொரு மொழியும் உயிர்ப்போடு திகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு பெரிய குடும்பத்தினுடைய‌ அடி நாதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

7 ஆயிரம் மொழிகளில் இரண்டு வாரத்திற்கும் ஒரு மொழியை இழந்து கொண்டிருக்கிறோம். 7 ஆயிரம் மொழிகளில் இந்த நூற்றாண்டின் இறுதியில் 3 ஆயிரம் மொழிகளை நாம் இழந்திருப்போம்.

2010 ஆம் ஆண்டு ஜன. 26 ஆம் தேதி 84 வயதான ஒரு பாட்டி இறந்து போனார். பாட்டிகள் இறந்து போவது செய்தி ஆவதில்லை. ஆனால் அந்தமானைச் சேர்ந்த அந்த பாட்டியின் இறப்பு உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளின் ஊடகங்களில் செய்தி ஆனாது. காரணம் அந்த பாட்டிதான் போ என்னும் மொழிக் குடும்பத்தின் கடைசி குடிமகள் ஆவார்.

அந்த பாட்டியின் மரணத்திற்கு பிறகு போ என்னும் மொழியில் பேச இந்த உலகத்தில் வேறும் யாரும் இல்லை. பாட்டியின் மரணத்திற்கு பிறகு ஒப்பாரி வைக்கவும் யாருமில்லை. ஒரு பாட்டியின் மரணம் அந்த மொத்த மொழி குடும்பத்தையும் வழித்தெடுத்து அழித்து ஒழித்துவிட்டது.

யுனெஸ்கோ சொல்கிறது இந்த உலகில் ஏறக்குறைய‌ 7 ஆயிரம் மொழிகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு இரண்டு வாரத்திலும் ஒரு மொழி செத்துக் கொண்டிருக்கிறது. 21 வது நூற்றாண்டில் 7 ஆயிரம் மொழிகளில் 40 சதம் மொழிகள் அழிந்துவிடும் என யுனெஸ்கோ சொல்கிறது. இதுதான் மொழிகளின் நிலை. இப்படியாக மொழிகளை இழந்து கொண்டிருக்கிறோம்.

மொழிகள் அழிந்து வருகின்றன. இந்த தருணத்தில் தமிழ் மொழி அழியாமல் இருக்க‌ நாம் என்ன செய்யலாம். நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை தினந்தோரும் ஒரு தமிழ் நாளிதழை படிக்கச் செய்யலாம். மாதத்திற்கு ஒரு தமிழ்ப் புத்தகத்தை வாசிக்கலாம், வாசிக்க செய்யலாம். பிள்ளைகளுக்கு தூயத் தமிழ்ப் பெயராக இடலாம். அதன் மூலம் நமது வீட்டில் தமிழ் ஒலி நமது வீட்டின் வரவேற்பறைகளில் வாசம் செய்யட்டும்.

ஒரு மொழி உயிர்ப்போடு இருக்க ஆராய்ச்சியாளர்கள் பல காரணிகளை கூறுகின்றனர். அதில் ஒன்று தற்கால மக்கள் அதனை பேசும் மொழியாக பேச வேண்டும். அந்த மொழிகளில் இலக்கியங்கள் எழுத்தப்பட வேண்டும். நாவல்கள், இதிகாசங்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுத்தப்பட வேண்டும். அந்த மொழியில் திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும். இணையத்தில் புழுங்கின்ற மொழியாக இருத்தல் வேண்டும். இது போன்ற பல அளவீடுகள்
இருக்க வேண்டும். இதனைக் கொண்டுதான் ஒரு மொழி வழக்கொழுந்திருக்கின்றதா, அல்லது வளர்ச்சி அடைந்துள்ளதா என்று ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிக்கின்றனர்.

நாமும் தமிழை அடுத்த தளத்திற்கும், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டிய மிகவும் முக்கியமான நாற்சந்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். நாம் மட்டும் தமிழை வாசித்தால் போதாது. நமது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் தமிழை வாசிக்க வேண்டும். இணையத்திலும், கைப்பேசியிலும் தமிழில் தட்டசச்சு செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கொ.வி.நன்னன், பேராசிரியர் கு.வணங்காமுடி, ந.இராமசாமி, மதுசூதனபாபு, தி.கோ.தாமோதரன், மா.நடராஜ், புலவர் கார்த்தியாயினி, போர்முரசு கதிரவன், நித்திய கல்யாணி, துளசிபட், சங்கத்தின் தலைவர் முத்துமணி, செயலாளர் மதியழகன், பொருளாளர் தினகர வேலு, துணைத் தலைவர் செந்தில்நாதன், வெங்கடேசன், ம.ஆறுமுகம், கோ.கருணாநிதி, கிருஷ்ணமூர்த்தி, ராஜகுரு, சிவகுமார், ஜேசுதாஸ், மலர் வண்ணன், முனுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்