பெங்களூரு, நவ. 1: ஜெயநகர் 9-வது பிளாக்கில் உள்ள கார்ப்பரேஷன் காலனி மைதானத்தில் 69-வது கன்னட ராஜ்யோத்சவாவை பல்வேறு தமிழ் அமைப்புகள், தாய்மொழி கூட்டமைப்புடன் இணைந்து வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடின.
பெங்களூரில் வாழும் தமிழர்கள் போன்ற 17 தமிழ்ச் சங்கங்களும், 50க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளும் இணைந்து ‘தாய்மொழி கூட்டமைப்பை’ உருவாக்கி, அதன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.டி.குமார் தலைமையில் கன்னட ராஜ்யோத்சவா நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை துப்புரவு தொழிலார்களுக்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி, அர்த்தமுள்ள கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயநகர் எம்எல்ஏ சி.கே.ராமமூர்த்தி நகரில் கன்னடர்கள் தவிர பிற மொழி பேசுபவர்கள் வசித்து வருகின்றனர். கன்னடர்கள் தாராளமாக மற்ற மொழியினர்களுக்கு அடைக்கலம் மற்றும் நட்பைக் காட்டியுள்ளனர். இங்கு மொழி, நிலம், நீர் விவகாரத்தில் கன்னடர்களைப் போல் வேற்று மொழியினருக்கும் உணர்வு இருக்க வேண்டும். வீட்டில் எந்த மொழியை வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால், வெளியில் வரும்போது கன்னடத்தில் பேச வேண்டும், இங்குள்ள மக்களை மதிக்க வேண்டும் என்றார்.
கன்னடர்களும் தமிழர்களும் ஆரம்பத்திலிருந்தே நட்பாக பழகி வருகின்றனர். இரண்டு மொழிகளும், மக்களின் வாழ்க்கை கிட்டத்தட்ட ஒன்றுதான். லட்சக்கணக்கான தமிழர்கள் கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூரில் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் அனைவரும் முன் வந்து கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடி, அவர்களும் கன்னடர்களாக வாழ்வது நல்ல வளர்ச்சி என்று பாராட்டு தெரிவித்தனர்.

தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.டி. குமார் பேசியது: கர்நாடகாவில் உள்ள தமிழர்களும் கன்னடர்கள்தான். எங்களை கன்னடத் தமிழர்கள் என்றழைக்க வேண்டும். இந்த மண்ணில் பிறந்து இங்கேயே வாழ்கிறோம். இரண்டு மொழிகளுக்கும் ஒற்றுமை உண்டு. நாம் அனைவரும் சகோதர சகோதரிகளைப் போல வாழ்கிறோம். எல்லாவிதமான ஒத்துழைப்பையும் தந்து அவர்களுடன் ஒன்றி வாழ்ந்து வருகிறோம். கன்னடர்களுடன் இணைந்து இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன என்றார்.
17 தமிழ்ச் சங்கங்கள், 50க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் இணைந்து தாய்மொழிச் சங்கம் அமைக்க, இன்று அனைத்து அமைப்புகளும் இணைந்து கன்னடர்களுடன் கன்னட ராஜ்யோத்சவாவை கொண்டாடின. இந்த மரபு தொடர வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னாள் பிபிஎம்பி உறுப்பினர் கோவிந்த நாயுடு, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ. தாமோதரன், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணிநன்னன், ராஜசேகர், கோபி ஏகாம்பரம், திருமலை, முனிராஜ், வினோத், கோபால் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.































































