பெங்களூரு, ஜன. 27: பெங்களூரு அல்சூரு திருவள்ளுவர் சிலை அருகே ஜன. 15 ஆம் தேதி நடைபெற்ற திருவள்ளுவர் தினத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறே என்று பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு அல்சூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு திங்கள்கிழமை (ஜன.27) பையப்பனஹள்ளி ரமேஷ் தலைமையில், பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் தலைவரும், சாந்திநகர் தொகுதி எம்.எல்.ஏவுமான என்.ஏ.ஹாரீஷ், அம்பேத்கர் வளர்ச்சி கழகத்தின் தலைவரும், முன்னாள் மேயருமான சம்பத்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய என்.ஏ.ஹாரீஷ், திருவள்ளுவர் தமிழர்கள் மட்டுமின்றி, உலக மாந்தர்கள் அனைவரும் சிறப்பாக வாழ்வதற்கான வாழ்வியலை திருக்குறள் மூலம் போதித்துள்ளார். எனவே அதனை அனைவரும் பின்பற்றி சிறப்பாக வாழ வேண்டும். பிறந்தால், இறப்பது உறுதி. இந்த இடைப்பட்ட காலத்தில், ஜாதி மத துவேஷத்தை நாம் துறந்து அனைவருடனும் அரவணைத்து வாழ வேண்டும் என்றார்.

பின்னர் பேசிய சம்பத்ராஜ், ஜன. 15 ஆம் தேதி நடைபெற்ற திருவள்ளுவர் விழாவின் போது, நான் வரமுடியாத சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக அன்று நான் வரவில்லை. எனவே திருவள்ளுவருக்கு மரியாதை செய்யும் நோக்கில் இன்று கலந்து கொண்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த ஆண்டுகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் நான் தவறாமல் கலந்து கொள்வே என்றார்.

நிகழ்ச்சி குறித்து பேசிய பையப்பனஹள்ளி டி.ரமேஷ்,கடந்த ஜன. 15 ஆம் தேதி பெங்களூரு அல்சூரில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் திரளாக தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர்கள், தெலுங்கர்கள், மளையாள சகோதரர்கள், வட நாட்டை சேர்ந்த நண்பர்களும் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற திருவள்ளுவர் தினத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் இதை விட சிறப்பாக திருவள்ளுவர் தினத்தை கொண்டாட திட்டமிட்டுள்ளோம். திருவள்ளுவர் தினத்தன்று திருவள்ளுவரை சிறப்பித்துக் கொண்டாட, தமிழர்கள் மட்டுமின்றி, மற்ற மொழியினரும் திரளாக கலந்து கொண்டு, விழாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், நாம் சோழர்கள் அமைப்பின் நிர்வாகி சாம்ராஜ்பேட்டை விநாயக், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், செயலாளர் வா.ஸ்ரீதரன், நிர்வாகி கோபிநாத், மாநில திமுகாவின் அமைப்பாளர் ந.இராமசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, கிளைக்கழகச் செயலாளர் நாகராஜ், மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பாலகிருஷ்ணன், நந்தகுமார், ரவி, ராஜசேகரன், கோபி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
































































