பெங்களூரு, ஜன. 9: தமிழர்களின் விழாவான தமிழ்ப் புத்தகத் திருவிழாவை நாம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற பெங்களூரு தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் நாட்காட்டி வெளியீட்டு விழா மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கூறினார்.
பின்னர் பேசிய அவர், பெங்களூரில் சிறு துளியாக தொடங்கிய பெங்களூரு தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் தற்போது பல நதிகளாக உருவாகியுள்ளது. இந்த பல நதிகள் வரும் காலத்தில் பெரும் கடலாக மாறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்த அமைப்பி உள்ள உறுப்பினர்கள் தங்கள் பணியையும், சேவையையும், உரித்தாக்கி, 3 ஆம் புத்தகத் திருவிழாவை பெரும் வெற்றி விழாவாக மாற்றி இருக்கிறீர்கள். இந்த வெற்றிக்கு காரணமாக உங்களை எல்லாம் மனமாற பாராட்டுகிறேன்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது போன்று சொற்ப உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பு தற்போது பெரிதாக வளர்ந்திருக்கிறது. தமிழ்ப் புத்தகத் திருவிழாவிற்கு குடும்பம், குடும்பமாக வருவதால், இது குடும்ப விழாவாக மாறி உள்ளது.
புத்தகத் திருவிழா என்பதனைத் தாண்டி, சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்ற விழாவாக மாறி உள்ளது. அந்த வகையில் தமிழர்களின் விழாவான தமிழ்ப் புத்தகத் திருவிழாவை நாம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார்.
நிகழ்வில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நாட்காட்டி, பொங்கல் தொகுப்பு, அறுசுவை உணவு வழங்கப்பட்டது.































































