விருதுநகர், ஆக. 3: விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள வி. வி. சண்முகம்- வள்ளியம்மை நினைவுத் திருமண மண்டபத்தில், உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் விருதுநகர் குறள் நெறிக் கழகம் நடத்திய திருக்குறள் மறுமலர்ச்சி மாநாட்டில் உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு.ஞானமூர்த்தி தலைமையில் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன். வி.ஜி.பி.உலக தமிழ் சங்கத்தின் நிறுவனர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டனர். மாநாடு பதிமூன்று நிகழ்வுகளாக நடைப்பெற்றது. திருக்குறளை முன்னிலைப் படுத்தி பல நூல்கள் வெளியிடப்பட்டன.
இதில் கர்நாடக மாநில பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவர் முனைவர் எஸ்.டி.குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், பெண்களை அழைப்பதற்க்கு நன்மதிப்பு அடையாள சொல்லான ஐயை பயன்படுத்த வேண்டும் ஆண்களை எப்படி நன்மதிப்பு அடைமொழியுடன் “ஐயா” என்று அழைக்கின்றோமோ, அதுபோல் பெண்களை ‘ஐயை’ என்று அழைத்து பெருமைப்படுத்த வேண்டும்.
இந்த ‘ஐயை’ என்ற தமிழ் வேர்சொல் சங்க இலக்கியங்களான அகநானூறு பாடல் ஆறிலும், நற்றினை பாடல் எண்பத்தாறிலும், ஐங்குறுநூறு பாடல் முன்னூற்றி எண்பத்தி மூன்றிலும் கலித்தொகை பாடல் எண்பத்தி மூன்றிலும், பெண்களைச் சிறப்புபடுத்தும் நன்மதிப்பு மிகு அடைமொழி சொல்லான ‘ஐயை’ என்ற சொல், சங்க இலக்கியங்களில் பயன் படுத்தப் பட்டிருக்கிறது காப்பியக் காலத்தில் உருவான, சிலப்பதிகாரத்தில் மரியாதைக்குறிய சிறப்பு சொல்லான “ஐயை” என்ற சொல் ‘காவுந்தி ஐயை’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது பாவலரேறு பெருஞ்சித்திரனார் ‘ஐயை’ என்ற நூலை எழுதி பெண்மையின் அடையாளத்தை வழங்கி உள்ளார். வரலாற்று ஆய்வாளர் ஒடிசா பாலு அவர்கள் ‘ஐயை’ மையப்படுத்தி தமிழகத்தில் ஒரு குழு உருவாக காரணமாக இருந்துள்ளார். அந்த குழு தற்ப்போது செயல் பட்டு வருகிறது.
ஆங்கிலத்தில் மேடம் என்ற சொல் பெண்களுக்கு அடைமொழியாக பயன் படுத்தப்படுகிறது. மதர் என்ற சொல் அம்மா என்ற புனித சொல்லாக பயன் படுத்தப்படுகிறது. ஆனால், பலர் மேடம் என்பதற்க்கு அம்மா என்ற புனித சொல்லை பயன்படுத்துகின்றனர்.ஆங்கில அடை மொழியான சர் என்ற சொல்லுக்கு மட்டும் ஐயா என்ற சொல்லை பயன்படுத்து கின்றனர். அது போலா மேடம் என்கிற ஆங்கில சொல்லுக்கு நிகராக, தமிழில் பெண்களை நன்மதிப்பு அடை மொழியாக திகழும், ‘ஐயை’ என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
“ஐயா” ஆண்பால் என்றால், பெண்பால் ‘ஐயை’ என்ற சொல் சரியாக இருக்கும் என்று, தமிழ் அறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர் பெருமக்களையும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று முனைவர் எஸ்.டி.குமார் பேசிய போது மூத்த தமிழ் அறிஞர்களும், தமிழ் சான்றோர்களும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். பல அறிஞர் பெருமக்களும் சான்றோர்களும் மாநாட்டில் “ஐயை” என்ற சொல்லை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடதக்கது






























































