பெங்களூரு, ஜன. 17: பெங்களூரு அல்சூர் ஏரி கரையில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாநில அரசின் சார்பில் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உள்பட சட்டபேரவை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், 100க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திருவள்ளூர் ஜெயந்தி விழா குழு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தின விழா பெங்களூருவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழா முன்னிட்டு பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் கர்நாடக மாநில அரசின் சார்பில் நிறுவியுள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் அதன் சுற்று பகுதிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கர்நாடக மாநில நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற டோளு குனிதா, டொள்ளு குனிதா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பிரபல இசையமைப்பாளர் பலராமன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சிலைக்கு மாலை அணிவிக்க வந்தவர்களை விழா ஒருங்கிணைப்பாளர் பையப்னஹள்ளி டாக்டர் டி. ரமேஷ், முன்னாள் பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் தி.கோ.தாமோதரன், முன்னாள் பெங்களூரு தமிழ்சங்க நிர்வாகி சுகுமாரன், வா.ஸ்ரீதரன், தற்போதைய நிர்வாகி கோபிநாத் உள்பட நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். மேளதாள, நாதஸ்வர இசையுடன் தலைவர்கள் வரவேற்கப்பட்டனர்

அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு கர்நாடக மாநில அரசின் சார்பில் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மாலை அணிவித்தார். கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, பெங்களூரு மத்திய மக்களவை தொகுதி உறுப்பினர் பி.சி.மோகன் எம்பி, பெங்களூரு சிவாஜிநகர் தொகுதி பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத், புலிகேசிநகர் தொகுதி உறுப்பினர் ஏ.சி.சீனிவாஸ், சாந்திநகர் தொகுதி உறுப்பினர் என்.ஏ.ஹாரிஷ், முன்னாள் மேயரும் கர்நாடக மாநில அரசின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வளர்ச்சி கழக தலைவருமான ஆர்.சம்பத்ராஜ், கர்நாடக மாநில தேங்காய் நார் வாரிய தலைவர் நாகராஜ், காங்கிரஸ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், முன்னாள் மேயர் கே.வி.கவுதம், பெங்களூர் தமிழ்ச்சங்கத் தலைவர் தாமோதரன், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், திருவள்ளுவர் சங்கத்தின் தலைவருமான எஸ்.டி.குமார், விஸ்வநாதன், யூனஸ் ஜோன்ஸ், காந்திநகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு கர்நாடக மாநில திராவிட முன்னேற்ற கழக மாநில பொறுப்பாளர் மொ.பெரியசாமி, மாநில பொறுப்பு குழு உறுப்பினர்கள் ந.ராமசாமி, போர்முரசு கதிரவன், கே.தட்சணாமூர்த்தி, சற்குணா, மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் டி.சிவமலை, துணை அமைப்பாளர்கள் என்.விக்ரம், லியோராஜன், பெரியார்நகர் வார்டு ஜேம்ஸ், சாம்ராஜ்பேட்டை வார்டு செயலாளர் நாகராஜ், மூத்த உறுப்பினர் நாம்தேவ் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.
அதிமுக பிரமுகர் சடகோபன், குமார், இந்திய குடியரசு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.தனபால், பொருளாளர் டாக்டர் பிரபு ராஜேந்திரன், தங்கவயல் தமிழ்ச்சங்க செயலாளர் தங்க. செங்குட்டுவன், பிரபுராம், செயல்தலைவர் கமல் முனிசாமி, பெங்களூரு தன்னுரிமை மனமகிழ் மன்ற தலைவர் ராஜசேகர், கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் முத்துமணி, செயலாளர் மதியழகன், பொருளாளர் தினகரவேலு, தமிழார்வலர்கள் கவிஞர் தேன்மொழியான், சிவகுமார், கோ,கருணாநிதி, ராஜகுரு, ரகுராம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் கோ.தாமோதரன் தலைமையில் நிர்வாகிகள் சம்பத், அமுத பாண்டியன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்தனர். கர்நாடக தமிழ் குடும்பங்கள் அமைப்பு தலைவர் செந்தில்நாதன், கர்நாடக தமிழ்-கன்னடர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராமசந்திரன், உலகதமிழ் கழக தண்டு பகுதி நிர்வாகியும் கவிஞருமான மதலைமணி, முத்தமிழ் மன்ற தலைவர் காசிநாதன், கோபி, ரீகன், திருமலை, ஆட்டோ சம்பத், குணசேகர், சாயகௌடா, சுகநேசன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
முன்னதாக திருக்குறள் மற்றத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் 1,330 திருக்குறள்களை பாடல்களாக பாடினர். விழாவில் கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகள், ஒன்றிய அரசு அலுவலங்கள் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி சுதந்திரத்துடன் இயங்கி வரும் ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள், தொழிலாளர்கள் பங்கேற்று மாலை அணிவித்தனர். திருவள்ளுர் தின விழா குழுவின் சார்பின் அதன் தலைவர் பையப்பனஹள்ளி டாக்டர் டி. ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

தமிழர்-கன்னடர் சகோதர பாசத்துடன் இணைந்து வாழ்கிறோம்: முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெருமிதம்
அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தபின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா பேசும்போது, சில ஆண்டுகளாக திறக்காமல் மூடி வைத்திருந்த திருவள்ளுவர் சிலையை திறக்க வேண்டும் என்ற முடிவை நான் மாநில முதல்வராக இருந்தபோது எடுத்தேன். இது தொடர்பாக அப்போது தமிழ்நாடு முதல்வராக இருந்த மு.கருணாநிதியை சந்தித்து பேசினேன். அப்போது பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையை நிறுவ தீர்மானித்தோம்.
இரு மகான்கள் சிலையை இரு மாநில அரசின் சார்பில் நடத்த முடிவு செய்தோம். முதலில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா எனது தலைமையில் நடந்தது. சிலையை மு. கருணாநிதி திறந்து வைத்தார். சென்னையில் அவர் தலைமையில் நடந்த விழாவில் சர்வக்ஞர் சிலையை நான் திறந்து வைத்தேன். இதன் மூலம் இரு மகான்கள் சிலை திறக்கப்பட்டதுடன், இரு மாநில மக்களிடம் சகோதர பாசம் அதிகரித்தது. நாம் இன்று வரை கன்னடர்-தமிழர் என்ற சகோதர பாசத்துடன் வாழ்ந்து வருகிறோம். இது இன்னும் பல காலம் தொடர வேண்டும் என்றார்.
































































