பெங்களூரு, ஜன. 17: திருவள்ளுவரை தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழி மக்களும் கொண்டாட வேண்டும் என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலித் சங்கர்ஷ் சமீதியின் துணைத் தலைவர் ஏ.ரீகன் ஸ்டீபன் தெரிவித்தார்.
பெங்களூரு அல்சூர் ஏரி கரையில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தலைமையிலான திருவள்ளூவர் ஜெயந்தி விழா குழு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தின விழா பெங்களூருவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழா முன்னிட்டு பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் கர்நாடக மாநில அரசின் சார்பில் நிறுவியுள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் அதன் சுற்று பகுதிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கர்நாடக மாநில நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற டோளு குனிதா, டொள்ளு குனிதா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பிரபல இசையமைப்பாளர் பலராமன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலித் சங்கர்ஷ் சமீதியின் துணைத் தலைவர் ஏ.ரீகன் ஸ்டீபன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்திய பிறகு, செய்தியாளர்களிடம் கூறியது: திருவள்ளுவர் தமிழர்கள் மட்டுமே சொந்தமானவர் அல்ல. அவர் உலகத்தில் வாழும் அனைத்து மொழியினருக்கும் சொந்தமானவர்.
அவர் வடித்துள்ள திருக்குறளில், உலக மாந்தவர்கள் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான அறம், பொருள், இன்பத்தை தந்துள்ளார். அவரின் குறளை பின்பற்றினாலே, உலகத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன், இணைந்து வாழ முடியும். எனவே அனைவரும் மதம், இனம், ஜாதி, மொழி கடந்த திருவள்ளுவரையும் அவர் வடித்துள்ள திருக்குறளையும் பின்பற்ற வேண்டும் என்றார். பேட்டியின் போது வெண்ணிலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.































































