பெங்களூரு, டிச. 22: ஜாதி, சமயம், மொழிக்கு அப்பாற்பட்டவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்று விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.
பெங்களூரு அல்சூர் ஏரிக்கரை அருகே உள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தில் ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற உள்ள திருவள்ளுவர் நாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) மாலை 4 மணி அளவில் விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கொ.தாமோதரன், மாநில திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ந.இராமசாமி, வா.ஸ்ரீதரன், கோபிநாத், விஜய்பூபதி, விஸ்வநாதன், ராஜேந்திரன், செந்தில்நாதன், திருநாவுக்கரசு, ராமசந்திரன், ராஜசேகர், குணசேகர், ரவிபாபு, புலவர் காத்தியாயினி, கோபி, சீனிவாசன், விட்டல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்கு பிறகு மற்றவர்களின் கருத்துகளுக்கு பதில் அளித்து விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் பேசியது: தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஜாதி, சமயம், மொழிக்கு அப்பாற்பட்டவர். அவர் தமிழில் திருக்குறளை எழுதினாலும், அது உலகத்தில் வாழும் மாந்தர்கள் அனைவரும் நன்னெறிகளை போதிப்பதாக உள்ளது.
எனவே அவரை அனைவரும் கொண்டாட வேண்டும். ஜன. 16 ஆம் தேதி அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு தமிழர் மட்டுமின்றி, அனைத்து மொழியினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
விழா தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். யாருக்கேனும் குறிப்பிட்ட குழுவில் சேர விரும்பினால் அவர்களுக்கு குறிப்பிட்ட குழுவில் இடம்பெற வழி செய்யப்படும். அதே போல விழாவிற்கு நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தலாம்.

திருவள்ளுவர் தினத்தில் கலந்து கொள்ள வரும் அனைத்துக் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற, மக்களவை, முன்னாள் மாமன்ற உறுப்பினர்களை உரிய வகையில் மரியாதை, கௌரவம் கொடுத்து வரவேற்கப்படும்.
விழாவிற்கு வரும் பொதுமக்கள், இளைஞர்கள், அவர்களுக்கு தொந்தரவு அளிக்காமல் கட்டுப்பாடோடு நடந்து கொள்ள வேண்டும். வரும் விருந்தினர்கள் தேவைப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துத் தரப்படும். விழாவில் டொள்ளு குனிதா உள்ளிட்ட கிராமிய, தமிழர் பாரம்பரிய நடனம், இசை கச்சேரி உள்ளிட்டவை நடைபெறும் என்றார்.































































