பெங்களூரு, அக். 17: கர்நாடக தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ஐந்தாமாண்டு தமிழ் புத்தக திருவிழா வரும் டிசம்பர் 18ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. விழாவுக்கான விளக்க ஏடு வெளியிடப்பட்டது.
கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ஐந்தாமாண்டு மிழ்ப் புத்தகத் திருவிழா டிச. 18ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை 10 நாட்கள் பெங்களூரு அல்சூரில் உள்ள ஆர்பிஏஎன்எம்எஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விளக்க ஏடு வெளியிட்டு விழா குயின்ஸ் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தின் பா.சு.மணி நூலகத்தில் 17 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது.
விளக்கேட்டை தினச்சுடர் பத்திரிக்கை ஆசிரியர் தேனமுதன் வெளியிட்டார். பெங்களூரு தமிழ்சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், சமூக சேவகர் இராஜகோபாலபாலாஜி ஆகியோர் பெற்று கொண்டனர். பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் செயலாளர் வா. ஸ்ரீதரன் கர்நாடக தமிழ்ச் சங்க தலைவர் ஜி.ராஜசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்ப் புத்தகத் திருவிழா பொறுப்பாளர் புலவர் கார்த்தியாயினி பேசுகையில், தமிழ்நாட்டை கடந்து வெளிமாநிலங்களில் முதல் முறையாக 2022ம் ஆண்டு தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் 8 நாட்கள் நடைபெற்ற முதல் தமிழ்ப் புத்தகத் திருவிழா வெற்றியுடன் முடிந்தது. ஆயிரகணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர். அதன் வெற்றியை தொடர்ந்து 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் வெற்றிகரமாக 4 ஆண்டுகள் தமிழ்ப் புத்தகத் திருவிழாக்கள் நடைபெற்றன. நிகழாண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஐந்தாமாண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழா 10 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள ஆர்பிஏஎன்எம்எஸ் கல்வி குழுமத்திற்கு சொந்தமான கல்லூரி வளாகத்தில் நடக்கும் புத்தக திருவிழாவில் 80க்கும் மேற்பட்ட பதிப்பகங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பொது அறிவு, அறிவியல், இலக்கியம், இலக்கணம், ஆன்மீகம், புராணம், நாடகம், வரலாற்று சிறப்புமிக்க நாடகங்கள், நாவல்கள், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிடம் புத்தகங்கள் வாசகர்களின் அறிவு பசிக்கு விருந்தாக கிடைக்கும். சிறுவர்களின் அறிவு வளர்ச்சி மற்றும் விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையிலான புத்தகங்கள் இடம் பெறுகிறது.
புத்தக திருவிழா நடக்கும் நாட்களில் தினமும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கும் வினா-விடை போட்டிகள், நாட்டுபுற கலை போட்டிகள், கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகிறது. சமூக முற்போக்கு நாடக அரங்கேற்றம், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ள நூல்கள் வெளியிடு, பட்டிமன்றம், கருத்தரங்கம், கவியரங்கம் ஆகியவை நடக்கிறது. புத்தக திருவிழாவில் சிறந்த நூல்களுக்கு ரூ.25 ஆயிரம் புத்தகங்கள்பரிசும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை புத்தகங்கள் பரிசாக வழங்கப்படுகிறது.
புத்தக திருவிழாவில் நமது தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள், உணவுகள் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. தமிழர்களின் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தி காட்டுவதுடன் அதை எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வசதியாக பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. விழாவின் இறுதி நாளில் தமிழ் பெருந்தகை விருதும், பத்து பேருக்கு தமிழ் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. புத்தக திருவிழாவின் சிறப்பு போற்றும் சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. கடந்த 4 புத்தகத் திருவிழாவுக்கு கொடுத்த ஆதரவு போல், இவ்வாண்டும் கர்நாடக தமிழர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். விழா தொடக்கத்தில் சங்கர்தாஸ் வரவேற்றார். இறுதியில் முனைவர் ரகுராம் நன்றி கூறினார். நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






























































