முகப்பு Bengaluru பெங்களூரில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருவள்ளுவர் தின‌ விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்: பையப்பனஹள்ளி டாக்டர்...

பெங்களூரில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருவள்ளுவர் தின‌ விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்: பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

95
0

பெங்களூரு, டிச. 15: பெங்களூரில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருவள்ளுவர் தின‌ விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு அல்சூரு திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தில் ஞாயிற்றுக்கிழமை திருவள்ளுவர் தின ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியது: திருவள்ளுவர் தின விழாவில் அனைவரும் சமம். காங்கிரஸின் மூத்த தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் இருந்தவரை இந்த விழாவை நடத்தி வந்தார். அவருடன் நான் இருந்ததால், அவரது மறைவுக்கு பிறகு இதனை எனது தலைமையில் நடத்தி வருகிறேன். வேறு யாரேனும் தலைமை ஏற்றால் அவருடன் இணைந்து இந்த விழாவை நடத்த தயாராக உள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினவிழா வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு இங்குள்ள அனைவருமே காரணமாவார்கள். எந்த ஒரு விழாவையும் தனியொருவரால் வெற்றிகரமாக நடத்த முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெறச் செய்ய முடியும்.

இந்த விழாவிற்காக ஒரு கமிட்டி அமைக்க முடிவு செய்துள்ளோம். மேலும் நிரந்தமாக ஒரு ஆலோசனை குழு அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். அண்மையில் ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. இது சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. உலகெமெல்லாம் திருவள்ளுவரின் புகழ் பரவி வருவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கர்நாடகத்தில் தமிழர்கள் 70 லட்சம் முதல் ஒரு கோடி வரை வாழ்ந்து வருகின்றனர். எனவே திருவள்ளுவர் தினவிழாவை நாம் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

எனவே விழாவையொட்டி அமைக்கப்படும் குழுக்களில் யாரேனும் இடம் பெற விரும்பினால் அவர்கள் விருப்பப்படும் குழுவில் இடம் பெறச் செய்யப்படும். விழாவில் கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்த விழாவை ஜாதி, மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செய்ய‌ வேண்டும். இந்த விழா மூலம் பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பலரும் நல்ல ஆலோசனை வழங்கி உள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி. விழாவிற்கு முன்னதாக பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும். அடுத்த கூட்டம் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் நடத்தப்படும். தொடர்ந்து விழாவில் பங்கேற்க‌ பிரபல தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். இதில் பங்கு கொள்ள யார் வந்தாலும் அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விழாவிற்கு வரும் தலைவர்களை வரவேற்று, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, கௌரவிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீதரன், பொருளாளர் கோபிநாத், திமுக மாநில அமைப்பாளர் ந.இராமசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, இளைஞரணியைச் சேர்ந்த ராஜசேகர், காங்கிரஸ் மூத்த பிரமுகர்கள் கோபிசந்தர், விஸ்வநாதன், ரகுதேவராஜ், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், ராஜசேகர், கோபி கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ந.முத்துமணி, கர்நாடக பகுஜன் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜி.எச்.சங்கர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் விஜயன், வேலு பிரபாகரன், இசையமைப்பாளர் பலராமன், தமிழினியன், கோவலன் உள்பட திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்