பெங்களூரு, டிச. 26: பிரபஞ்சம் என்ற நந்தவனத்தில் இறுதியாக பூத்த அற்புத மலர் மனிதன் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் தயவு பிரபாவதி அம்மா தெரிவித்தார்.
பெங்களூரு அல்சூர் ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோவில் ஓம் ஸ்ரீ மஹான் ஒடுக்கத்தூர் சுவாமிகள் மடத்தில் வியாழக்கிழமை (டிச. 25) நடைபெற்ற ஆன்மீக விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பயம் போக்கும் பக்தி என்ற தலைப்பில் சிறப்பு அருளூரை வழங்கிய தயவு பிரபாவதி அம்மா இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் ஆற்றிய அருளுரை: உலகத்திலேயே 84 லட்சம் உயிரினங்கள் வாழ்கின்றன. அதில் சிறப்பு பெற்ற உயிரினம் மனிதன். எங்களின் குரு அருள் தந்தை வேதாத்திரி மகிரிஷி அவர்கள், பிரபஞ்சம் என்ற நந்தவனத்தில் இறுதியாக பூத்த அற்புத மலர் மனிதன் என்று கூறுவார்கள். அந்த அற்புத மலர் என்பது எப்போது என்றால் மனிதன் சிந்திக்கும் போதுதான். எதுவானாலும் சிந்திக்க வேண்டும். சிந்திக்கவில்லை என்றால் நாம் 5 அறிவு விலங்குகள்தான்.

இதுவரை நமது பெரியோர்கள் நமக்கு பயபக்தி என்றுதான் கூறியுள்ளனர். இறைவனுக்கு பயப்படுவது என்பதுதான் பக்தியுடைய ஆரம்பநிலை. கடவுளுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். இது ஏசு கிறிஸ்துவின் வாசகம். கடவுளுக்கு பயந்தால் தவறு நடக்காது. தவறு, குற்றங்கள் நடக்கவில்லை என்றால் வீடு, நாடு, சமூகம், உலகம் சிறப்பாக இயங்கும்.
கடவுள் மீதான பயம் நமக்கு ஒழுக்கத்தை கொடுக்கும். ஆதியில் மனிதர்கள் விலங்குகளோடு, விலங்குகளாக வாழ்ந்திருப்பார்கள். பின்னர் கடந்த நூறாண்டுகளாக பரிணாம வளர்ச்சி பெற்று, பல்வேறு மாற்றங்கள் பெற்றுள்ளார்கள். என்றாலும் சிலர் இன்னும் மூடநம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர். அது போன்றவர்களிடத்தில் பயபக்தியை உருவாக்கி, ஒழுக்கத்தை கற்பிக்க நமது முன்னோர்கள் முயன்றுள்ளனர்.
கடவுள் மீதுள்ள பயத்தை போக்க வேண்டும் என்றால் கடவுள் மீது அன்பு செலுத்த வேண்டும். அப்படி அன்பு செலுத்தினால் நமக்கு பயம் போய்விடும். இதற்கு உதாரணங்களாக வேடர் கண்ணப்பன், திருஞானசம்பந்தர், துருவன், பக்த பிரஹலநாதனை கூறலாம். அவர்கள் கடவுள் மீது அதீத அன்பு செலுத்தியதால், அவர்களுக்கு எந்தவிதபயமும் இல்லாமல் போனது என்றார்.

அருளுரைக்கு முன்பு, கலந்து கொள்ள வந்த அனைவருக்கும் காய்கறி சூப்பும், பின்னர் இரவு உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒடுக்கத்தூர் சுவாமிகள் மடத்தின் சுவாமிகள், மாறன் சுவாமிகள், வா.ஸ்ரீதரன் சுவாமிகள், கோபிநாத் உள்பட கருணை நெறி வளர் பவுண்டேஷனை சேர்ந்த அன்பர்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.































































