பெங்களூரு, ஜன. 30: தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வை உறுதி செய்து, உரிமைகளை பெற்றுத்தர தன்னலமில்லாமல் அல்லும் பகலும் அயராது உழைக்கும் தமிழ் இதழாளர்களுக்கு விருதளித்து, பாராட்டி, மதிப்பளித்து மகிழும் போக்கு பொதுவெளியில் காணமுடியவில்லை. தமிழர்களின் வீடும், பணியாற்றும் ஏடும் சிறக்க சொந்த உடல்நலனைக்கூட பேணாமல் உழைக்கும் தமிழ் இதழாளர்களுக்கு தமிழ்ச்சமூகம் அளித்திருக்கும் பரிசு, புறக்கணிப்பு, அலட்சியமே. பல்வேறு பணி நெருக்கடி, பண நெருக்கடிக்கு இடையே மக்களின் இருண்டவாழ்க்கையில் ஒளிபாய்ச்சும் தமிழ் இதழாளர்களாக பணியாற்றுவதே பெரும் சாதனையாகும். அந்த வாழ்நாள் சாதனைகளை அடையாளம் கண்டு நன்றி வெளிச்சம் பாய்ச்சும் முயற்சியை கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் மேற்கொண்டுள்ளது.
கருநாடகத்தில் தமிழ் இதழியல் துறைக்கு பங்காற்றிய ஏராளமான இதழாளர்கள் அடையாளம் தெரியாமல் காலத்தில் கரைந்துபோன வரலாறுகள் பல உண்டு. அந்த வரலாறுகளை மீட்டெடுத்து, சமூகத்தில் தமிழ் இதழாளர்களுக்கு தனித்த அடையாளங்களை உருவாக்குவதற்காகவே, 2021ஆம் ஆண்டு முதல் கருநாடக இதழியல் சாதனையாளர் விருதுகளை வழங்கி, பாராட்டி மகிழ்ந்து வருகிறோம். கருநாடகத்தில் தமிழ் இதழாளர்களை கொண்டாடி மகிழ்வதற்காகவே, 1964ஆம் ஆண்டு ‘நம்ம வீட்டு நாளிதழாக’ தினச்சுடர் மலர்ந்த பிப். 7ஆம் தேதியை 2021ஆம் ஆண்டு முதல் கருநாடகத் தமிழ் இதழாளர் நாளாக கொண்டாடி வருகிறோம். அதன்பொருட்டு, கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மூத்த பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, கௌரவிக்கப்படுகிறது.
2025-ஆம் ஆண்டுக்கான கருநாடகத் தமிழ் இதழியல் சாதனையாளர் விருதுகள்:
- பா.இளவழகன்(ஊற்று, குறள் ஒலி)
- மதலைமணி(முக்கூடல் தங்கமுரசு)
- ஆ.கணேசன்(தினத்தந்தி, தினமணி)
- மு.வில்வபதி(தினமணி)
- ஜே.ஏ.நாதன்(வத்திக்கான் வானொலி)
- ஆ.வி.மதியழகன்(தினமலர், தினகரன்)
- ப.தங்கமணி(தினச்சுடர்)
- க.தினகரவேலு(தினமணி, தினச்சுடர்)
- இராஜேந்திரபாபு(நால்வர்)
- துளசிபட்(நம் உரத்த சிந்தனை)
ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது என்றும், இதற்கான முன்னெடுப்புகளை கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் செய்து வருகிறது என்று அதன் தலைவர் ந.முத்துமணி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.































































