முகப்பு Bengaluru நமது அடையாளங்களையும், பெருமைகளையும் மீட்டெடுக்க தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்: வேலு பிரபாகரன்

நமது அடையாளங்களையும், பெருமைகளையும் மீட்டெடுக்க தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்: வேலு பிரபாகரன்

55
0

பெங்களூரு, நவ. 24: நமது அடையாளங்களையும், பெருமைகளையும் மீட்டெடுக்க தமிழர்கள் ஒன்று திரள வேண்டும் என்று சோழ மன்னர் பரம்பரையின் நிறுவனத் தலைவர் வேலு பிரபாகரன் தெரிவித்தார்.

நமது தாய் மொழியை மறைப்பதற்கு மறைமுகமான முயற்சிகள் நடைபெறுகின்றன. பெங்களூரில் நாராயண பிள்ளை நீதி என்பதனை ராமுலு வீதி என மாற்றியுள்ளனர். இந்தப் பெயரை வைக்க யாரும் கேட்காத போதும் அந்தப் பெயரை வைத்துள்ளனர். இதன் மூலம் நமது மொழியை அழிக்க முயற்சிக்கின்றனர்.

முனுசாமி கவுண்டர் சதுக்கம் என்ற பெயரை மாற்றி உள்ளனர். மற்ற மதத்தினர் பெயரையோ இனத்தினர் பெயரையோ மாற்ற யாரும் முயற்சிப்பதில்லை, அதற்கான தைரியமும் யாருக்கும் இல்லை. அவர்களின் பெயர்களையோ, அடையாளங்களையோ தொட்டால் என்ன நடக்கும் என்பதை அரசு புரிந்து கொண்டுள்ளது. ஆனால் தமிழர்களின் பெயர்களை, அடையாளங்களை தொடர்ந்து மறைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. காரணம் தமிழர்கள் கேட்பாரற்று கிடக்கின்றனர் என்பதுதான்.

எனவே தமிழ் இளைஞர்களிடம் ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்களிடமிருந்து தான் தமிழ் பற்று தொடங்க வேண்டும். நாம் அனைவரும் தமிழர்கள் என்கின்ற போது நீங்கள் எல்லாம் பெருமைப்பட வேண்டும். உலகத்தில் தமிழர்கள்தான் எல்லாத்துறைகளிலும் சாதனையாளர்கள். எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத மாட்டு வண்டி ஓட்டி வந்த காலத்தில் பேருந்தையும், மகிழுந்தையும், இருசக்கர வாகனத்தையும் கண்டுபிடித்தவர்கள் நம் தமிழர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரியது.

பெங்களூரு உட்பட கர்நாடகத்தில் தேவாலயங்களில் உள்ள தமிழ் பெயர்கள் அழிக்கப்படுகின்றன. ரூபாய் நோட்டிலும் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. அதனை யாரேனும் கிழிக்க முன்வருவார்களா?. தேசியக் கொடியை வடிவமைத்தவர் சண்முகம் செட்டியார். அதை யாரும் மறுக்கவோ, மறக்க முடியுமா?. தேசியக்கொடியை நாம் இப்போதும் கௌரவித்து வணங்கி வருகிறோம். தமிழர் வடிவமைத்தது என்பதால் அதனை ஏற்றுக் கொள்ளாது என்று யாரேனும் கூற முடியுமா?.

விமானத்தையும், கடல் வழியையும் கண்டுபிடித்தார்கள் நம் தமிழர்கள். கடல் கடந்து ஆட்சி செய்தவர்கள் நம் தமிழர்கள், குறிப்பாக‌ சோழ மன்னர்கள். அதனால் தான் எங்களது தமிழ் இயக்கத்திற்கு சோழ மன்னர் பரம்பரை என்று பெயர் வைத்துள்ளோம். சோழ மன்னர்கள் தற்போதைய கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்துள்ளனர். அந்தப் பெருமையை நாம் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு மாநில அரசியலில் தமிழர்கள் முக்கிய பொறுப்புகளில் வரவேண்டும். எனவேதான் இந்த அமைப்பை தொடங்கியுள்ளோம்.

எந்தக் கட்சி சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர்களுக்கு முக்கிய பதவியும் பொறுப்பும் வழங்க வேண்டும். அது தற்போது சாத்தியமாகாமல் இருப்பதற்கு நம்மிடையே ஒற்றுமையே இல்லாமல் இருப்பதுதான். எனவே தமிழர்கள் ஒன்று கூட வேண்டும். அதற்கான முயற்சி தான் சோழ மன்னர் பரம்பரை செய்து வருகிறது.

முதற்கட்டமாக சர்வக்ஞர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தமிழர்களை ஒன்று திரட்டி, இயக்கத்தின் அறிமுக கூட்டமும், பங்கு கொண்டவர்களிடம் ஆலோசனையையும் கேட்டுள்ளோம். இதே போன்று வரும் காலங்களில் கர்நாடகத்தின் அனைத்து தொகுதி தமிழ் மக்களிடமும் ஆலோசனை கேட்கப்படும். அதன்படி இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள‌ப்படும். மணிப்பிரவாளம் வந்துதான் தமிழ் மொழி மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் மாற்றம் ஏற்பட்டது. எனவே தெற்கில் உள்ள அனைத்து மொழிகளும் நமது சகோதர மொழிகள்தான் என்றார்.

நிகழ்வில் முன்னாள் தமிழ்ச்சங்கத்தலைவர் தி.கோ.தாமோதரன், நிர்வாகி அமுத பாண்டியன், திமுகாவைச் சேர்ந்த ந.ராமசாமி, எம்ஜிஆர் ரவி, விஷ்வகவி திருவள்ளுவர் சங்கத் தலைவர் பைய‌ப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், விஸ்வநாதன், சி.வி.ராமன்நகர் கிருஷ்ணன், ராஜா, தம்பிதுரை, ராஜேந்திரன், கர்நாடக தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி, சூரியன், ரவிசந்திரன், சுரேஷ், கபிலன், பாண்டுரங்கன், திருநாவுக்கரசு, கோபி ஏகாம்பரம், குணசேகர், தனஞ்செயன், கோவலன், ஜே.வில்லியம், ராஜசேகர் உள்ளிட்ட தமிழ்பற்றாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தனம் வேளாங்கன்னி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்