பெங்களூரு, செப். 12: உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அதிகார பதவியில் அமரத் தேவையான லட்சியத்தை நோக்கி இலக்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார்.
பெங்களூரில் வியாழக்கிழமை (செப். 11) கர்நாடக தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கர்நாடக தமிழர்நாள் ((தமிழ் இதழியல் செம்மல் முனைவர் பா .சு.மணி பிறந்தநாள்), முனைவர் பா.சு.மணி நினைவு நூலகம் திறப்பு, இலவச அரசு சேவைகள் வழங்கல் மையத் தொடக்கம், சிறப்புப் பாட்டரங்கம் மற்றும் ஐஏஎஸ் ஆக ஆசைப்படு- வழிகாட்டி சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள சங்க அலுவலக கட்டிடத்தில் பா.சு.மணி நூலகத்தை கர்நாடக மாநில கூடுதல் காவல்துறை தலைவர் எஸ்.முருகன் திறந்து வைத்தார். நூலகத்திற்கு 50க்கும் மேற்பட்ட நூல்களை பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர் வழங்கினார்.
அதை தொடர்ந்து இன்ஸ்டிடுயூஷன் ஆஃப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ்ட்ஸ் அரங்கில் நடந்த கர்நாடக தமிழர் நாள் மற்றும் பா.சு.மணி பிறந்த நாள் விழாவில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. லிட்டர் பிளவர் பள்ளி தாளாளர் மதுசூதனபாபு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பெங்களூரு தமிழ்சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், சுரங்க துறை முன்னாள் இயக்குனர் கோ,மணிவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்நாடக மாநில காவல்துறை கூடுதல் தலைவர் எஸ்.முருகன் பேசும்போது, இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் பல ஞானிகள், தலைவர்கள், மேதைகளை உருவாக்கிய இடம் நூலகம் தான். நூலகங்கள் அறிவு சுரங்கம். அங்கு கிடைக்காத பொக்கிஷம் வேறு எங்கும் கிடையாது. என்னதான் சமூக வளைத்தலங்களில் நாம் தேடும் தகவல்கள் கிடைத்தாலும், புத்தகங்களில் கிடைக்கும் தகவலுக்கு இணையாக முடியாது. அதனை வாசிக்கும் போது உணர்வு பூர்வமான அனுபவம் கிடைக்கும்.
நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கு முன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். எப்படியாவது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டேன். அதற்கு எனக்கு துணையாக இருவர் மட்டுமே இருந்தனர். அதில் முதன்மையானவர் பொய்யாமொழி புலவர் என்று போற்றும் திருவள்ளுவர். அவர் எழுதிய எண்ணி துணிக கருமம் என்ற குறல் தான் எனக்கு உத்வேகம் கொடுத்தது. அதை பின்பற்றினேன்.

இரண்டாமானவர் கவியரசு கண்ணதாசன். அவர் எழுதிய என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற பாடல் வரிகள். நான் பலமுறை அந்த பாடலை பாடுவேன். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் கவலைப்படாமல், ஒவ்வொருவரும் நாம் என்ன லட்சியத்தை மனதில் தாங்குகிறோமே, அதை நோக்கி பயணிக்க வேண்டும். அதில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடம் உள்ளிட்ட இந்தியாவில் பல மாநிலங்களில் தமிழர்கள் ஐஏஎஸ்., ஐபிஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளாக அதிகளவில் இருந்தனர். தற்போது அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழர்களாகி நாம், அதிகளவில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஐஏஎஸ், ஐபிஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளாக உருவாக வேண்டும். அதிகார பதவிகள் தமிழர்களிடம் இருக்க வேண்டும். அந்த திசையை நோக்கி தமிழ் இளைஞர்கள் பயணிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர் பேசும்போது, கர்நாடக தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கம், தமிழ்மொழியை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் முத்தாய்ப்பாக சங்க அலுவலகத்தில் பா.சு.மணி பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இதை தமிழர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனது அறிவாற்றலை வளர்த்து கொள்ள நூலகங்கள் உதவியாக இருந்தது.
தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் மேம்பட வேண்டும். இந்த மூன்றிலும் வெற்றி கண்டால், தொழிலதிபராக தங்களை வளர்த்து கொள்ள முடியும். தமிழர்கள் அரசு அல்லது தனியார் துறையில் பணியில் இருந்தாலும் சாமானிய பணியில் இருக்கக்கூடாது. அதிகார பதவியில் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கி நமது இலக்கு இருக்க வேண்டும். நம்மால் முடியாதது எதுவுமில்லை. எல்லாம் முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே மூலதனமாக இருக்க வேண்டும்.
வாழும் காலத்தில் நாம் மற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்பதை காட்டிலும் கெடுதல் எதுவும் செய்யவில்லை என்ற மனசாட்சியுடன் வாழ வேண்டும். நானும், ஐபிஎஸ் அதிகாரியான முருகனும் இன்று கர்நாடக அரசில் பணியாற்றுகிறோம். எங்கள் உயர்வுக்கு நாங்கள் பணிக்கும் கொடுத்து வரும் ஈடுப்பாடு காரணமாகும். அரசு நம்மை திறமையானவர்கள் என்பதனை ஒப்பு கொள்ளும் வகையில் ஆட்சி பணியில் மக்களுடன் பணி இருக்க வேண்டும் என்றார்.

அதை தொடர்ந்து சிறப்புப் பாட்டரங்கம் ‘‘வாராது வந்த மாமணி’’ என்ற தலைப்பில் முனைவர் தேவி இராஜேஷ் தலைமையில் நடந்தது. இதில் பாவலர்கள் மா.வித்யா, செ.நந்தினி, வி. அனுன்சியா, ஜுவேரியா தஹ்சீன், பேரா.தீபா, சு.சரண்யா மற்றும் ஆசுகவி இனியா ஆகியோர் பாடினார். முடிவில் கவி.தினகரவேலு நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர் கிருஷ்ணகுமார், கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, இந்திய குடியரசு கட்சி மாநில செயலாளர் ஆர்.தனபால், சமூக ஆர்வலர் இராமசந்திரன், டாக்டர் மலர்வண்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கொ.வீ.நன்னன், புலவர் கார்த்தியாயினி, நீலசந்திரா வார்டு திமுக செயலாளர் மு.மாணிக்கவேலு, டாக்டர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடக மாநிலத்தில் தமிழர்களை சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்க செய்ய வசதியாக ஐஏஎஸ் ஆக ஆசையா? என்ற வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 50 மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். சுமார் 90 நிமிடங்கள் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் சிவில் சர்வீஸ் தேர்வு எப்படி எழுத வேண்டும். அதற்கு என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும், எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகள் எப்படி இருக்கும். அதை எப்படி சந்திக்க வேண்டும் என்பதை டாக்டர் ராம்பிரசாத் மனோகர் தெளிவாக விளக்கி கூறினார். பின் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். இது மிகவும் பயனுள்ளதாக பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தெரிவித்தனர்.
































































