பெங்களூரு, மார்ச் 30: பெங்களூரு ஜே.பி. நகரில் உள்ள மாரேனஹள்ளி கலாபவனத்தில் மகளிர் தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் ஜெயநகர் சட்டமன்ற உறுப்பினர் சி.கே. ராமமூர்த்தி, அவரது மனைவியும் முன்னாள் பிபிஎம்பி உறுப்பினருமான நாகரத்னா ராமமூர்த்தி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை முன்னாள் பிபிஎம்பி உறுப்பினர் சந்திரசேகர் ராஜு, வார்டு தலைவர் ஆனந்த் பி, மற்றும் மகளிர் அமைப்பாளர் நேத்ராவதி ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். மருத்துவத் துறையில் டாக்டர் தீபா தேவரஜ் (MBBS, MD, FICC, FEM) நடனத் துறையில் குடியரசுத் தலைவர் விருது பெற்ற கலைஞரான மந்தஸ்மிதா பட், இசைத் துறையில் மாநில விருது பெற்ற பின்னணிப் பாடகியான சந்திரிகா குருராஜ், யோகா துறையில் கிருஷ்ணவேணி, இசை மற்றும் கமகா துறையில் கமலா ஸ்ரீனிவாஸ், மற்றும் சமூக சேவைத் துறையில் நாகரத்னா ராமமூர்த்தி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியை ராதா கேசவ ஹெப்பார் தொகுத்து வழங்கினார். தீர்த்தஹள்ளி ரமேஷ் மற்றும் அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சி, கிராமப் பெண்களின் கலை நிகழ்ச்சிகள், மற்றும் மந்தஸ்மிதா பட் குழுவினரின் நடன நிகழ்ச்சி ஆகியவை இடம்பெற்றன. கிராமப் பெண்களுக்காக சிறப்பு விளையாட்டுப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய சி.கே. ராமமூர்த்தி, பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தலைமை ஏற்று சமூகத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
































































