பெங்களூரு, செப். 23: சிங்கப்பூர், மலேசிய தமிழர்களைப் போல் கர்நாடக தமிழர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.
பெங்களூரு அல்சூரு யாதவா சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை, அரண்மனை மைதானத்தில் அக். 20 ஆம் தேதி நடைபெற உள்ள கன்னடர், தமிழர் ஒற்றுமை மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை ஏற்று பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழர்கள் திரளாக வர முடிவு செய்துள்ளனர். அவர்கள் வருவதற்கு தேவையான வாகனங்களை முன் கூட்டிய பதிவு செய்துள்ளனர்.
தமிழர்களை மாநாட்டிற்கு நாங்கள் போராட அழைக்கவில்லை. கர்நாடகத்தில் தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக் காட்டவே இந்த மாநாட்டிற்கு வரும்படி அழைத்துள்ளோம். கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.

என்றாலும் அவர்களுக்கு எந்த ஒரு அரசியல் பதவியும் கிடைக்காமல், தங்களின் உரிமைகளை பெறுவதிலும் பின் தங்கி உள்ளனர். எனவே தமிழர்களின் ஒற்றுமையை காட்டினால்தான் நமக்கான உரிமைகளை பெற முடியும். இதை இந்த மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்து காட்ட வேண்டும்.
எனவே நடைபெற உள்ள மாநாட்டில் நமது ஒற்றுமையை எடுக்க காட்ட தமிழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். நமது கன்னட சகோதரர்களுக்கு நமது இணக்கத்தை எடுத்துக் கூற வேண்டும். மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் தலைவர்களை நாம் அழைக்கப்போவதில்லை. கர்நாடகத்தின் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், முன்னாள் முதல்வர், கர்நாடகத்தில் இருந்து மத்திய அமைச்சர்களாகி உள்ளவர்களை அழைக்கப்போகிறோம்.

அவர்களும் எங்களின் அழைப்பை ஏற்று வருவதாக உறுதி அளித்துள்ளனர். மாநாட்டில் சிங்கப்பூர், மலேசிய தமிழர்களைப் போல் கர்நாடக தமிழர்களும் ஒற்றுமையாக இருப்பதை எடுத்துக் காட்ட வேண்டும். மாநாட்டை வெற்றி பெறச் செய்வதன் மூலம் வரும் காலத்தில் கர்நாடகத்தில் தமிழர்களின் சந்ததியினரை வளமாக வாழ வழி செய்வோம் என்றார். நிகழ்ச்சியில் கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துமணி, கர்நாடக தமிழ் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் தனஞ்செயன் என்கிற வெற்றிச் செல்வன்,

விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பைப்பனஹள்ளி ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ராஜேந்திரன், தன்னுரிமை மனமகிழ் மன்றத்தின் செயலாளர் ராஜசேகர், கர்நாடக தமிழ்க் குடும்பங்களின் கூட்டமைப்பின் தலைவர் செந்தில்குமார், ஆதர்ஷ் ஆட்டோ, கார் ஓட்டுநர் சங்கத்தின் செயலாளர் சம்பத், ராபர்ட் கிளைவ், ராஜகுரு, ராமசந்திரன், குப்புராஜ், வளவன் உள்பட ஏராளமான தமிழ், கன்னட சங்கங்களின் நிர்வாகிகள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பிரகாஷ்நகர் வள்ளலார் சன்மார்க சங்கத்தில் எஸ்.டி.குமார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டின் ஆலோசனைக்கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள், அப்பகுதியைச் சேர்ந்த தொழில்துறையினர்,பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
































































