முகப்பு Bengaluru என்னை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பெங்களூர் கவிதாசன்: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டண்ட் மாஸ்டர் ஹாசன் ரகு

என்னை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பெங்களூர் கவிதாசன்: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டண்ட் மாஸ்டர் ஹாசன் ரகு

120
0

பெங்களூரு, ஜன. 30: என்னை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் தமிழ் சினிமா, நாடக வசனகர்த்தா, இயக்குநர் பெங்களூர் கவிதாசன் என்று பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டண்ட் மாஸ்டர் ஹாசன் ரகு தெரிவித்தார்.

அண்மையில் கர்நாடக மாநிலத்தின் கலைப் பிரிவில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ், கன்னட திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய‌ ஹாசன் ரகு, தன்னை திரைத்துறையில் அறிமுகப்படுத்திய பெங்களூரு கவிதாசனை மாகடி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்து சால்வை, மைசூரு தலைபாகை அணிவித்து ஆசிபெற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசு கலைதுறையில் எனது சேவையை அங்கீகரித்து, பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஜிம்னாஸ்டிக்கில் பயிற்சி பெற்றிருந்த என்னை, தான் கதை வசனம் எழுத்திய மாடர்ன் தியேட்டர்ஸின் வல்லவன் வருகிறான் படத்தில் அறிமுகம் செய்து வைத்தவர் பெங்களூரு கவிதாசன். அதைத் தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களில் சண்டை கலைஞானாகவும், நடிகராகவும் நடிக்க வாய்ப்பு பெற்று தந்தவர் கவிதாசன் அவர்கள்தான். திரைத்துறைக்கு அவர்தான் என் முதல் குரு.

தமிழில் அறிமுகமான நான் பின்னர் கன்னட திறை உலகிற்கு அறிமுகமானேன். என்னை ஸ்டண்ட் மாஸ்டராக தான் இயக்கிய கன்னட திரைப்படம் ரங்கநாயகியில் அறிமுகம் செய்து வைத்தவர் புட்டண்ணாகனகல் ஆவார். அதனைத் தொடர்ந்து 200 மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளேன். அதுமட்டுமின்றி தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளராகவும், பெங்களூருவில் புதிய தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறேன். களரிபயட்டு மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பல்வேறு தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளேன். ஆக்ஸிடென்ட் திரைப்படத்திற்காக 1984-85 ஆம் ஆண்டு மாநில அரசு விருதைப் பெற்றுள்ளேன்.

நான் சுமார் 20 ஆண்டுகளாக நாடகத்திலும் பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி கலைத் துறையில் எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை என்னை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய பெங்களூரு கவிதாசன், கன்னட இயக்குநர்கள் புட்டண்ணா கனகல், நாகபரணா உள்ளிட்டவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த விருது எனக்கு புதிய சமூகப்பொறுப்பை வழங்கி உள்ளது. எனது கலைச்சேவையை சமூகத்தின் வளர்ச்சிக்கும், இளைய தலைமுறையின் எழுச்சிக்கும் பயன்படுத்துவேன். இந்த நேரத்தில் எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்க காரணமானவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்