பெங்களூரு, ஆக. 8: ஆடி தள்ளுபடி மற்றும் வரமஹாலட்சுமி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸில் ‘2 வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா அண்மையில் பெங்களூரு பசவனகுடியில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி பேராசிரியர்கள் நாகரத்னா, கீதா, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் மண்டல துணை மேலாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் வாடிக்கையாளர்களுக்கு முதல் விற்பனையை வழங்கி தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.

இந்த சிறப்பு விற்பனையில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு, சேலம் சில்க்ஸ், கோயம்புத்தூர் சாப்ட் சில்க், திருபுவனம் சில்க் உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டுப்புடவைகள், சின்னாளபட்டி காட்டன் சேலைகள் மற்றும் சில்க் காட்டன் சேலைகள், நெகமம் காட்டன் சேலைகள், போச்சம்பள்ளி காட்டன் சேலைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், ரெடிமேட் சட்டைகள், வேட்டிகள், தோத்திகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஜவுளிப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.

‘2 வாங்கினால் ஒன்று இலவசம்’ சிறப்பு தள்ளுபடி விற்பனை பெங்களூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸின் பசவனகுடி, விஜயநகர், மல்லேஸ்வரம், ராம்மந்திர் ராஜாஜிநகர், ஜெயநகர் மற்றும் மைசூர்–மங்களூரு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட கிளைகளில் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை நடைபெறும். பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு சலுகையைப் பயன்படுத்தி தரமான கைத்தறி மற்றும் பட்டுத் துணிகளை வாங்கி பயனடையுமாறு கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.































































