பெங்களூரு, டிச. 23: கர்நாடகத்தில் தமிழர்களுக்கு பலம் வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக ‘நாம் சோழர்கள்’ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது என்று அதன் அமைப்பாளராக பொறுப்பேற்ற பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நாம் சோழர்கள் அமைப்பின் சர்வதேசத் தலைவர் ஜெயபிரகாஷ் குருஜி தலைமையில் அந்த அமைப்பு கர்நாடக மாநிலத்தில் தொடங்கப்பட்டது. அதன் தொடக்க விழாவில் மாநில அமைப்பாளராக பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தேர்வு செய்யப்பட்டு, அந்த பொறுப்பை ஏற்றார். துணை அமைப்பாளராக விநாயக் பொறுப்பேற்றார்.
பின்னர் பேசிய டி.ரமேஷ், பெங்களூரில் ஆண்டுதோறும் விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். தற்போது நாம் சோழர்கள் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம். இதன் நோக்கம் தமிழர்களை ஒற்றுபடுத்துவதுதான். தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். குறிப்பாக கர்நாடகத்தில் தமிழர்களுக்கு பலம் வர வேண்டும்.

தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய கௌரவம், குறிப்பாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநித்துவத்திற்கான வாய்ப்பை பெற வேண்டும். அது வேலை வாய்ப்பாகவும் இருக்கலாம், அரசியல், அரசு பணிகளிலில் பிரதிநித்துவமாக இருக்கலாம். தமிழர்களுக்கு மாமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினர்கள் பதவிகள் உரிய முறையில் கிடைக்காமல் உள்ளது. அது தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும். அதுதான் நமது நோக்கம்.
முதலில் தமிழர்கள் ஒன்று சேர வேண்டும். என்றைக்கு நாம் 50 ஆயிரம், ஒரு லட்சம் பேர் என்று பலத்தை காட்டப் போகிறோம் என்று தெரியவில்லை. நாமும் பல கூட்டங்களில் கலந்து கொண்டு சொல்வது இதைத்தான். அந்த வாய்ப்பு எந்த தலைமையிலானலும் சரி, நமக்கு கிடைக்க வேண்டும். என்றைக்கு நாம் ஒரு லட்சம் பேர் கூடுகிறோமோ அன்றுதான் நாம் நினைத்தது நடக்கும்.
நமது பலத்தை காட்டினால் மட்டுமே, நம்மை அடையாளப்படுத்த முடியும். வெவ்வேறு மொழியினர் அதிக அளவில் திரண்டு தங்களது பலத்தை கட்டுகின்றனர். ஆனால் அதனை நாம் இதுவரை அதனை செய்ய முடியவில்லை. அது மிகவும் முக்கியம், அந்த எண்ணம் தமிழர்கள் அனைவரது மனதிலும் வர வேண்டும். ஆனால் அது ஒரு சிலருக்கு புரிவதில்லை என்பது வியப்பாக உள்ளது என்றார்.

இதைத் தொடர்ந்து நாம் சோழர்கள் அமைப்பின் சர்வதேச தலைவர் ஜெயபிரகாஷ் குருஜி பேசியது, இந்த அமைப்பு தமிழ் மன்னர்களுக்கானது. சேரர், சோழர், பாண்டியர்களுக்கான அமைப்பு. நாம் சோழர்கள் என ஏன் பெயர் சூட்டியுள்ளோம் என்றால், உலகத்தில் தமிழுக்கும், தமிழர்களுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தவர்கள் சோழர்கள். சேர, பாண்டிய மன்னர்கள் நமது மண்ணில் மட்டுமே பெயர் பெற்றவர்கள். ஆனால் சோழர்கள் மட்டும்தான், உலகமெல்லாம் சென்று ஆண்டவர்கள். அதற்காகத்தான் நாம் சோழர்கள் என்று அமைப்பிற்கு பெயர் வைத்துள்ளோம்.
இந்த நாம் சோழர்கள் அமைப்பு தொடங்கப்பட்டு, உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்பட பல நாடுகளில் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. நாம் சோழர்கள் என்று பெயர் சூட்டி இருந்தாலும், எல்லா தமிழ் மன்னர்களின் பெருமையை மீட்டெடுக்கத்தான் இந்த அமைப்பு. கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடு, தமிழகம் உள்பக பலருக்கு ராஜராஜசோழன் விருதுகளை சென்னையில் வழங்கி வருகிறோம்.
அண்மையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து, கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் விமான நிலையங்கள் உள்பட பல இடங்களுக்கு மன்னர்களின் பெயர் வைக்கப்பட்டது போல, தமிழ்நாட்டிலும் வைக்க வலியுறுத்தி உள்ளோம் என்றார். நிகழ்ச்சியில் மாநில திமுகவின் அவைத் தலைவர் மொ.பெரியசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜசேகர்,

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர் வா.ஸ்ரீதரன், ராமசந்திரன், எம்.ஜி.ஆர் மணி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், விஸ்வநாதன், ராஜசேகர், வேலு பிரபாகரன், செந்தில்நாதன், தொழிலதிபர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீதர், ஆதர்ஷா கார், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் செயலாளர் சம்பத், ராஜகுரு, தமிழடியான், ரவி கோவலன், திருமலை உள்பட பாஜக உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.































































