பெங்களூரு, டிச. 25: புகழ்பெற்ற தமிழ் நடிகரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான டாக்டர் எம்ஜிஆரின் நினைவு நாள் உரிமைக்குரல் பாரத் ரத்னா எம்ஜிஆர் நலிவுற்றோர் அறக்கட்டளையின் நிறுவனர் உரிமைக்குரல் எம்ஜிஆர் ரவி தலைமையில், எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

பெங்களூரு அல்சூரில் உள்ள பெங்களூருத் தமிழ்ச்சங்கத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 24) உரிமைக்குரல் எம்ஜிஆர் ரவி தலைமையில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்வில் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு ரவி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவும், நோயாளிகளுக்கு ரொட்டி, பால், பழங்கள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எம்ஜிஆரின் திரைப்படங்களில் இடம்பெற்ற கொள்கை, நம்பிக்கை ஊட்டும் பாடல்கள் பாடும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் மலேசியா, இலங்கை, தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும், பெங்களூருத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் வா.ஸ்ரீதரன், விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ், கோபிநாத், கர்நாடக இந்து சேனா தலைவர் சீனிவாஸ் நாயுடு, டாக்டர் மோகன், டாக்டர் பல்பீர்சிங் பேடி, தியாகராஜன், விஸ்வநாதன், கோபி, யுவராஜ், சந்தர், செந்தில், பேராசிரியர் அனிஷா, கபிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய ரவி, எம்ஜிஆர் அவர்கள் மறைந்த போது அவரது உடல் வைத்திருந்த இடத்திற்கு சென்று நான் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த 90 வயதுடைய இஸ்லாம் மதத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், உருது மொழியில், இறைவா எனது ஆயுளை எடுத்துக் கொண்டு, அதனை எம்ஜிஆர் அவர்களுக்கு கொடுங்கள் என்று தேம்பி தேம்பித் அழுததை பார்க்க முடிந்தது.

எம்ஜிஆர் அவர்கள் வயதையும், ஜாதி, மதம், மொழி கடந்து பலராலும் நேசிக்கப்பட்டவர். ஏழைகள் உள்பட அனைவருக்கும் உதவும் எண்ணம் கொண்டவர். அவரது மறைவு என்னைப் போன்று அவரை நேசிப்பவர்கள் மட்டுமின்றி, நாட்டுமக்களுக்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். எம்ஜிஆர் மறைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார் என்றார்.































































