பெங்களூரு, நவ. 11: தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியை வெகு சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பாராட்டினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஸ்ரீராமபுரம் பகுதியில் சாய்பாபா திருமண மண்டபத்தில் கர்நாடக மாநிலத் திமுக சார்பில் முப்பெரும் விழா மற்றும் திமுக பவள விழா மற்றும் சாதனையாளர்களுக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், முரசொலி மாறன், தளபதி மு க ஸ்டாலின், உதயநிதி பெயரில் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் வெண்ணிலா கதிரவனுக்கு பெரியார் விருதும், சுந்தரேசனுக்கு அண்ணா விருதும், தங்கவயலைச் சேர்ந்த பொன் சாரங்கபாணி டாக்டர் கலைஞர் விருதும், ஆனந்தராஜூக்கு பேராசிரியர் விருதும், தளபதி மு.க.ஸ்டாலின் விருது தங்க வயல் ஆதித்தனுக்கும், முரசொலி மாறன் விருது நாராயணசாமிக்கும், உதயநிதி விருது முருகானந்தம் ஆகியோருக்கும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், தே.மதியழகன் தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் அர, சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விருதுகளை வழங்கி பின்னர் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியது: 1949 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் கடந்த 75 ஆண்டுகளாக தங்கு தடை இல்லாமல் செயல்பட்டு வருவதற்கு பெரியார் அண்ணா, கலைஞர் வகுத்து தந்த கொள்கைகளே காரணம் தமிழகத்துக்கு வெளியே கர்நாடகத்தில் திராவிட இயக்க கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு திமுகவை உயிர் போடு வைத்திருக்கும் இங்கு வாழும் மக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இந்த கட்சிக்காக எவ்வித தன்னலமும் பாராமல் உழைத்த தொண்டர்களுக்கு இந்த விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், முரசொலி மாறன், தளபதி மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களில் விருது வழங்கி கௌரவத்திருப்பது மகிழ்ச்சியான தருணமாகும். இந்த பணியில் ஈடுபட்டிருக்கும் கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி உள்ளிட்ட கட்சியின் தோழர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நல்லாட்சியை வழங்கி வரும் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள், எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை வெகு சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது செயல்பாடுகளை இந்திய துணை கண்டமே வியந்து பார்த்து போற்றி வருகிறது. நம்முடைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திராவிட இயக்கத்தின் சிந்தனைகள் கொள்கைகளை இளம் தலைமுறையிடம் ஒன்று சேர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.

மாணவிகளுக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும், மகளிருக்கும் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிவிப்பில் சொல்லாத பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் தமிழ்நாடு தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதல் நிலைக்கு முன்னேறி வருகிறது.
எவ்வித தன்னலமும் பாராமல் உழைக்கும் திமுகவின் கோடான கோடி தொண்டர்கள் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தையும் கொள்கைகளையும் எவராலும் அசைத்துப் பார்க்க முடியாது விருது பெற்ற பெருமக்களுக்கு பாராட்டுக்கள் என்றார். நிகழ்வில் மாநில துணை அமைப்பாளர் ஜி.இராமலிங்கம், மாநில இலக்கிய அணி செயலாளர் போர்முரசு கதிரவன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.மணி, கிருஷ்ணகிரி மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணை அமைப்பாளர் ஆர்.எஸ்.கிரி, மாநில மகளிர் அணி அமைப்பாளர் சற்குணா இமதி, மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் மு.இராஜசேகர், உட்லண்ஸ் கணேசன், தங்கவயல் கரிகாலவளவன், ஜி.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





























































