பெங்களூரு, ஆக. 26: பெங்களூரில் அக். 20 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழர், கன்னடர் ஒற்றுமை மாநாட்டில் இருதரப்பு கலாசாரத்தையும் பின்பற்றப்படும். அதில் அரசியல் நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை எஸ்.டி.குமார் தலைமையில் பெங்களூரு அரண்மனை திடலில் அக். 20 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழர், கன்னடர் ஒற்றுமை மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கு கொண்டனர். கூட்டத்தில் தமிழர், கன்னடர் மாநாட்டின் இலட்சினை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

பின்னர் பேசிய எஸ்.டி.குமார்: எந்த ஒரு மாநாட்டையும் சிறப்பாக நடத்த வேண்டும் என்றால் கட்டமைப்பு அவசியம். நாம் நடத்துள்ள மாநாடு குறித்து கர்நாடக தமிழர்கள் என்ன நினைக்கின்றனர் என்ற கருத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இது போன்ற கூட்டங்களை தொடர்ந்து கூட்டி வருகிறேன்.
மாநாட்டை வெற்றிகரமாக நடத்த குழு அமைப்பது அவசியம். குறிப்பாக மத்திய குழு, மேடை நிர்வாக குழு, மேடை நிர்வாக துணைக் குழு, உணவு ஏற்பாட்டுக் குழு, வாகனங்களை ஒழுகப்படுத்தும் குழு, முக்கிய பிரமுகர்களை, தமிழ் அமைப்புகளை வரவேற்கும் குழு, இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கும் குழு, கண்காட்சி நிர்வகிக்கும் குழு, விளம்பர குழு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்க உள்ளோம்.

குழுவில் சிவமொக்கா, தங்கவயல், மண்டியா, பத்ராவதி தமிழ்ச்சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மாநில நமது மாநாடு குறித்து மாநில அளவில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர்களிடத்திலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அவர்கள் வழங்கும் அனைத்து உதவிகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள் மாநாடு முடிந்த பின்னர் வரவு செலவு கணக்கு வெளிப்படையாக ஒப்படைக்கப்படும். மாநாட்டில் தமிழர் கன்னடர் கலாசாரத்தை பின்பற்றுவோம். அதில் அரசியல் நிகழ்ச்சிகள் இடம் பெறுவதை தவிர்ப்போம்.

மாநாட்டில் வெளியிடப்படும் சிறப்பு மலரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் வாழ்த்துரை பெற முயற்சி மேற்கொள்ளப்படும். தமிழ் பற்றுள்ளவர்களிடம் பொருளாதார உதவி பெறவும் தயங்க வேண்டாம். இனி வரும் நாட்களில் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் என்றார்.
நிகழ்ச்சியில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஸ்ரீதரன், கோபிநாத், கர்நாடக தமிழ் ஆசிரியர்களின் சங்கத் தலைவர் தனஞ்ஜெயன், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், ராஜசேகர், ஆதர்ஷ் ஆட்டோ ஓட்டுனர் சங்க செயலாளர் சம்பத், ரவிகோவலன், ராஜகுரு, ராமச்சந்திரன், திருமலை உள்ளிட்ட திரளான தமிழ் பற்றாளர்கள் கலந்து கொண்டனர்.
































































