பெங்களூரு, ஆக. 8: தமிழர்கள் வாழ்க்கை, பொருளாதாரத்தில் வெற்றி பெற தைரியம், கற்றல், விடாமுயற்சியை கடைபிடிக்க வேண்டும். விளக்கு ஓராயிரம் விளக்குகள் எரிய காரணமாக இருப்பதுபோல், வாழ்க்கையில் சாதித்தவர்கள், வரும் காலத்தில் சாதிப்பவர்களுக்கு வழிகாட்டும் விளக்காக இருக்க வேண்டும் என்று பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் தெரிவித்தார்.
பெங்களூரு ஸ்ரீராமபுரம் அடுத்த லட்சுமிநாராயணபுரத்தில் உள்ள வடலூர் ஜோதி இராமலிங்கசுவாமி சமசர சன்மார்க சங்கத்தில் கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், தொழில் துறையில் சாதனைப்படைத்தவர்களுக்கு “டாக்டர் ராம்பிரசாத் மனோகர் விருது’ வழங்கும் விழா அரிமா சங்க ஆளுநர் டாக்டர் ஜி.மோகன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய அரசின் தர நிர்ணய ஆணைய உறுப்பினர் நரசிம்மன் பழனி, தன அபிருத்தி கூட்டுறவு வங்கி தலைவர் சுந்தரவேலு, தணிக்கையாளர் பழனி பொன்னுசாமி மற்றும் ஏஎம் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தொழில் துறையில் சாதனைப் படைத்த கர்நாடக சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க (காசியா) பொருளாளர் ஆர் துரை, காசியாவில் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலதிபர்கள் வி பாஸ்கரன், ஏ.பழனி, ஆர் குமார், ஜெரவிசந்திரன், வி.தினேஷ்குமார், சி.தேவேந்திரன். சி.எம்.சுப்ரமணியம். இராம சுப்ரமணியம், எஸ்.மதிவாணன் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான தடகள போட்டியில் சர்வதேச விருது பெற்ற ஆர்.பிரசாத் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சாதனையாளர்களுக்கு விருது வழங்கி டாக்டர் ராம்பிரசாத் மனோகர் பேசியது:வெள்ளையர்களை எதிர்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரனார் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார். அதேபோல் பெங்களூரில் தமிழர்கள் தொழில்துறையில் சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை பாராட்டி, கௌரவிக்க வேண்டியது நமது கடமை.
தொழில்துறையில் சாதிக்க பொருளாதாரம் மட்டும் ஆணிவேர் என்று நினைக்கூடாது. அதை விட சாதிப்பதற்கு தைரியம், தொழில் கற்றல் மற்றும் விடா முயற்சி ஆகிய மூன்று குறிக்கோள்களும் முக்கியமானதாகும். ஓர் விளக்கு தான் மற்றொரு விளக்கு ஏற்ற காரணமாக உள்ளது. அது ஓராயிரம் விளக்குகள் எரியவைக்கும் சக்தியாக உள்ளது.
அதுபோல் தொழில் துறையில் சாதனைப் படைத்துள்ள நீங்கள் எதிர்கால நமது தமிழ் இளைஞர்கள் சாதனை படைக்க வழிகாட்டி என்ற விளக்காக இருக்க வேண்டும். தோல்விகளை கண்டி பயப்படாதீர்கள், தோல்விகள் வந்தபோதாலும், விடாமுயற்சியுடன் போராடினால் அதில் வெற்றி பெற முடியும். பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களில் தொழிலாளிகளாக வரும் தமிழர்கள் ஓயாமல் உழைக்கின்ற திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி உழைத்தால்தான் எதிர்காலத்தில் அவர்கள் உரிமையாளர்களாக மாற முடியும்.

பெங்களூரில் மட்டுமின்றி உலகம் முழுவதும் எட்டு திக்கும் சென்று, வெற்றிக் கொடிகளை நட்டுக் கொடுக்கும் தமிழர்களை நாம் தட்டிக் கொடுக்க வேண்டும். தமிழர்கள், தமிழர்களாக வாழவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும், 3 அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். முதலாவது கல்வியை புகட்ட வேண்டும். தமிழர்களிடம் திறமைகள் வளர்க்க வேண்டும். மூன்றாவதாக பொருளாதாரத்தில் உயர்த்த வேண்டும்.அடுத்த வரும் நாட்கள் நாம் எடுத்து வைக்கும் அடிகள் வெற்றி படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
நமது வீரத்தமிழை உலகெலாம் பரப்புவோம். தமிழர்கள் தொழிலிலும், கல்வியிலும், பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாளே, நமது நன்நாள் என்றார்.































































