பெங்களூரு, ஜூலை 28: தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் பெரும் தலைவர் காமராஜர். அதனை நிலைப்படுத்தியவர் எம்ஜிஆர் என்று பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.
பெங்களூரு ஸ்ரீராமபுரம் தயானந்த நகர் 7-வது கிராஸ் பகுதியில் உள்ள பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தில் காமராஜர் அறக்கட்டளை சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்.டி.குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவை திருக்குறள் போற்றி சங்க நிர்வாகி இலட்சுமணன் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக இந்து நாடார் அசோசியேசன் செயலாளர் கிருஷ்ணவேணி, காங்கிரஸ் பிரமுகர்கள் பாலகிருஷ்ணன், ராஜேந்திரன். சம்பத், ஜே.சரவணன் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவரும் தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான எஸ்.டி.குமார் வழங்கினார். நிர்வாகி பிரபாகரன் நன்றி உரை ஆற்றினார்.

விழாவில் திருவள்ளுவர் சங்கத் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான, எஸ்.டி.குமார் பேசும் போது:’கல்வி கண் திறந்த காமராஜர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளை தொடங்கி தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தார்.
மேலும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்தார். அவர் படித்த விருதுப்பட்டியின் க்ஷத்திரிய வித்யாலயா பள்ளிக்கூடத்தில் இலவச கல்வி, பிடி அரிசி வழங்கும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டது.
இது தான் மதிய உணவு திட்டம் கொண்டு வர, காமராஜருக்கு தாக்கமாக அமைந்தது. இதை தொடர்ந்து காமராஜர் தமிழக முதல்வரான போது மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்தினார். கால போக்கில் அத்திட்டம் நீர்த்து போகாமல், நிலைப்படுத்தியவர் எம்ஜிஆர் அவர்கள், அன்று காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது’ என்றார்.































































