பெங்களூரு: உலக சுகாதார நிறுவனத்தின் இரண்டாவது பாரம்பரிய மருத்துவப் பன்னாட்டு உச்சி மாநாடு நிகழாண்டு டிச. 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை புதுதில்லி, பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய அரசு, ஆயுஷ் அமைச்சகம், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் இயங்கிவரும் சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு சார்பில் இம்மாநாட்டின் செய்தியாளர் சந்திப்பு, டிச. 12 ஆம் தேதியன்று பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவின் ஆராய்ச்சி அலுவலர் விஞ்ஞானி -III மற்றும் பொறுப்பு, மேலும் உலக சுகாதார நிறுவனத்தில் சித்தமருத்துவம் சார்பாக பல பணிகளில் சேர்ந்து பணியாற்றிய மரு. மூ. கண்ணன், இம்மாநாடு இந்தியாவின் சித்தா, ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சோவா-ரிக்பா மற்றும் ஹோமியோபதி ஆகிய அனைத்து ஆயுஷ் மருத்துவ முறைகளிலுள்ள வலிமையை உலகளவில் பறைசாற்றிடக் கூடிய களமாக அமையும் என்று கூறினார்.
மேலும் இம்மாநாட்டின் செயல் திட்டம் இம்மருத்துவ முறைகளிலுள்ள ஆராய்ச்சி, பாரம்பரிய அறிவைப் பாதுகாத்தல், புத்தாக்கம் செய்தல், தர உறுதிப்பாடு, மின்மயமாக்குதல் போன்றவற்றின் முன்னேற்றங்களிற்கான இந்தியாவின் கருத்திற்கு ஒத்திசைந்து இருப்பதாக எடுத்துரைத்தார்.
இம்மாநாட்டின் கருப்பொருள்: “உடல்நலம் மற்றும் நல்வாழ்விற்கு அறிவியல் வழியிலான செயல்முறையில் சமநிலை” என்னும் தலைப்பில் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் மரபுசார் மருத்துவ அறிவு, மண்சார்ந்த நல்வாழ்வில் மேம்பாடு அடைதல்’ ஆகிய கருப்பொருளில் இம்மாநாட்டின் கலந்துரையாடல்கள் அமையும் எனவும் தெரிவித்தார்.
‘பாரம்பரிய மருத்துவத்தை உலகமயமாக்குவதற்கான செயல்திட்டங்கள், ஆய்வு முறையியல்கள் மற்றும் அதன் பயன்பாடுகள், நலவாழ்விற்கு அறிவியல், பாரம்பரிய மருத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புகளைச் சந்தைக்குக் கொண்டு வருதல், அதை வளர்க்க முதலீடு பெறுதல்’ போன்ற தலைப்புகளில் இம்மாநாட்டின் அமர்வுகள் நடக்குமென்றும் எடுத்துரைத்தார்.
இந்திய ஆயுஷ் அமைச்சகம் இத்தகைய அனைத்து நிலைகளிலும் தன்னிகரற்ற பங்களிப்பைச் செய்யத் தயாராக உள்ளது என்றும், பாரம்பரியம் சார்ந்த மருத்துவ ஆய்வுகள், மருந்துச் செய்முறைப் பணிகள், ஒழுங்குமுறை மேம்பாடு, மருத்துவர்கள் திறன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த சுகாதார முன்மாதிரிகள், பாரம்பரிய மருத்துவ வலிமைகளைக் கண்டறிதல் போன்றவற்றில் இம்மாநாட்டின் வாயிலாக இந்தியா உலகத்திற்கு முன்னோடியாக விளங்கித் தலைமைத்துவம் கொள்ளும் என்பதையும் தெரிவித்தார்.
பல நாடுகளில் இருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் நேரடியாகவும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இணைய வாயிலாகவும் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி, உலக சுகாதார நிறுவனத்தின் பல முக்கியத்தலைவர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். இந்த இரண்டாவது பாரம்பரிய மருத்துவப் பன்னாட்டு உச்சி மாநாடு ஆயுஷ் மருத்துவமுறைகளை உலகளவில் கொண்டு சேர்க்கும் என்பதையும் தெரிவித்தார்.































































