முகப்பு Special Story வாழ்க்கையின் வெற்றிக்கு நம்பிக்கை, விடாமுயற்சி தேவை: டாக்டர் ராம் பிரசாத் மனோகர்

வாழ்க்கையின் வெற்றிக்கு நம்பிக்கை, விடாமுயற்சி தேவை: டாக்டர் ராம் பிரசாத் மனோகர்

95
0

பெங்களூரு, அக். 16: மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருந்தால் வெற்றி பெற முடியும் என்று பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸ் தெரிவித்தார்.

எதிர்கால தலைமுறையினர் ஐஏஎஸ் அதிகாரியாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் எழுதியுள்ள ‘கருவில் இருந்து கலெக்டர் வரை’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள இராமகிருஷ்ண மிஷன், விவேகானந்தர் கல்லூரியில் நடைபெற்றது.

நூலை தமிழ்நாடு ஆளுநரின் முதன்மை செயலாளர் கிர்லோஷ் குமார் வெளியிட தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை ஆணையர் டாக்டர் ஆனந்தகுமார் பெற்று கொண்டார். தமிழ்நாடு காவல் துறை ஐஜிபி டாக்டர் பாலகிருஷ்ணன், இராமகிருஷ்ண மிஷன் துணை தலைவர் பி.ஆர்.விட்டல், விவேகானந்தர் கல்லூரி முதல்வர் குமரேசன், இந்திய வருவாய் ஆணையர் கனகசுப்ரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் குறித்து திறனாய்வு தார்வார் மாவட்ட ஆட்சியர் திவ்யா பிரபு செய்தார்.

இறுதியில் நூல் ஆசிரியர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் ஏற்புறை ஆற்றி பேசும் போது, இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் மரமாக இருந்து மற்றவர்களுக்கு பலன் தர வேண்டும். அந்த நோக்கத்தில்தான் நான் இந்த சமூகம் எனக்கு என்ன கொடுத்ததோ, அதை திருப்பி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் சாமானிய நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். பிறப்பு முதல் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலை எட்டும் வரை போராட்டங்களை சந்தித்தேன். கல்வியில் நான் சிறந்து விளங்க எனது பெற்றோர், உடன் பிறந்த சகோதரி, நண்பர்கள் தியாகமும், உதவியும் செய்தனர். அனைவரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நான் படித்தேன்.

கால்நடை மருத்துவ படிப்பு முடித்து பணியாற்றினாலும், இந்திய குடிமை பணி (ஐஏஎஸ்) அதிகாரியாக வேண்டும் என்பது எனது லட்சியமாக இருந்தது. அதற்காக ஓன்றிய அரசு நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். முதலில் எனக்கு இந்திய வனப் பணி (ஐஎப்எஸ்) கிடைத்தது. அதில் இணைந்து பணியாற்றினேன்.

இரண்டாவது முறையாக மீண்டும் தேர்வு எழுதிய போது, இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) பணி கிடைத்தது. அதில் சேர்ந்தது பணியாற்றினேன். இருப்பினும் ஐஏஎஸ் வேட்கை குறையாமல் இருந்ததால் மூன்றாவது முறை தேர்வு எழுதிய போது இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) கிடைத்தது. சில ஆண்டுகள் காவல் துறை அதிகாரி இருந்தேன்.

தொடர்ந்து எனது லட்சியம் நோக்கி பயணித்து நான்காவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். அதில் எனது லட்சிய கனவான ஐஏஎஸ் கனவு நனவாகியது. ஏற்கனவே மூன்று ஆட்சி பணியில் பணியாற்றிய அனுபவம் ஐஏஎஸ் பணியை சிறப்பாக நிர்வகிக்க உதவியாக இருந்தது.

எனது வாழ்க்கையில் நான் சந்தித்த சோதனைகள், அனுபவித்த சிரமம், லட்சியத்தை அடைய எடுத்துக் கொண்ட முயற்சி, அதில் வெற்றி ஆகிவற்றை அடிப்படையாகக் வைத்து எதிர்கால தலைமுறை ஐஏஎஸ் கனவை நோக்கி பயணித்து அதில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கருவில் இருந்து கலெக்டர் வரை என்ற நூலை எழுதினேன்.

எனது வாழ்க்கை அனுபவம், ஐஏஎஸ் கனவை நிறைவேற்ற எடுத்துககொள்ள மேற்கொள்ள வேண்டிய முயற்சி ஆகியவற்றை நூலில் எழுதியுள்ளேன். ஒவ்வொரு மனிதனும் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்