முகப்பு Spritual முருக சமயம் கௌமாரம் காக்க முருக பக்தர்கள் முன்வருக: முனைவர். எஸ். டி. குமார் அழைப்பு

முருக சமயம் கௌமாரம் காக்க முருக பக்தர்கள் முன்வருக: முனைவர். எஸ். டி. குமார் அழைப்பு

211
0

சேலம்: முருக சமயம் கௌமாரம் காக்க முருக பக்தர்கள் முன்வருக என்று தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவருமான முனைவர் எஸ்.டி. குமார் கேட்டுக் கொண்டார்.

உலக முருக பக்தர்கள் சேவா சங்க கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் சேலம் அம்மா பேட்டை, செங்குந்த முதலியார் மண்டபத்தில் நடந்த ஐம்பெரும் விழாவில், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவருமான முனைவர் எஸ். டி. குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து பேசும் போது இந்து மதத்தின் ஒரு பகுதியான முருக வழிப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கௌமாரம் சமய நெறியை முருக பக்தர்கள் காக்க வேண்டும் என்று முருக பக்தர்கள், தமிழ் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

முருகனும் தமிழும் என்ற தலைப்பில் அவர் பேசியது:‍
சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியில் உதித்தது, சரவண பொய்கையில் குளிர்ந்த எழுந்த சேயோனுக்கு வெற்றி வேல், வீர வேல், ஞான சக்திவேல், அரகோரா என்று, எனது முதல் வணக்கம் செலுத்தி, விழா ஏற்பாட்டாளர்கள், உலக முருக பக்தர்கள் சேவா சங்க கூட்டமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், தலைவர் கோடீஸ்வரன் அவர்களுக்கும், வருகை நல்கி இருக்கிற ஆன்றோர், சான்றோர், முருக பக்தர்கள் அனைவருக்கும் எனது வணக்கம் செலுத்தி, நேரம் கருதி சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் அடிப்படையில் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள, முருகனும் தமிழும் தலைப்புக்குள் செல்கிறேன்.

நமது பழம் பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், சேயோன் மேய மை வரை உலகமும் என்ற முருகனை குறித்த குறிப்பு இடம் பெற்றுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, ஐங்குறுநூறு, பெரும்பாணாற்றுப்படை, மதுரை காஞ்சி, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் நமது முருகப்பெருமானை போற்றுகிறது.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கின், முதல் பகுதியில் உள்ள பத்துப்பாட்டு பகுதியில், நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை திகழ்கிறது, இதில் முருகப்பெருமானை குறித்து மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதில் ஆறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை ஆகியவற்றில் முருகனின் சிறப்பும், வழிபாட்டு முறையும் விளக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பல வழிபாடுகளில் ஒன்றாக, சேவல் கொடி ஏற்றப்பட்டு, நறுமணம் கமழும் மலர்கள் சூடி, ஆட்டினை வெட்டி, அதன் இரத்தத்துடன் தினை கலந்து, மாமிச படையலிட்டு வெறியாட்டமாடி, முருகனுக்கு விழாவெடுத்து மகிழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இடும்பன் மலை வடிவில் காவடி கொண்டு வந்த வரலாறு தொன்று தொட்டு தொடர்கிறது. தற்காலத்தில் 20 பதுக்கும் மேற்பட்ட வகை வகையான காவடிகளை சுமந்து வந்து தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற கோரியும், நேர்த்தி கடனை செலுத்தவும் வழிப் படுகின்றனர். இப்படி காவடி எடுத்து வழிபடும் சிறப்பு, தமிழ் தெய்வமான முருக பெருமானை தவிர, வேறு எந்த கடவுளுக்கும் இல்லை.

தமிழோடு முருகனும், முருகனோடு தமிழர்களும் வாழ்வதற்கு காவடி மிகப்பெரிய சாட்சி. முதலாம் தமிழ்ச் சங்கத்திற்கு சிவபெருமான் தலைமை தாங்கி நடத்தினார். இரண்டாம் தமிழ்ச் சங்கத்திற்கு அவரது மகன் தலைமை தாங்கி நடத்தினார். இப்படி நான் பேசும் அரசியல் வாரிசுகளுக்ககுள் நீங்கள் நுழைய வேண்டாம், அது வேறு, இது வேறு.

படைத்தல் தொழில் புரியும் பிரம்மன் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியவில்லை என்று அவரை சிறையில் அடைத்த முருகன். இதையறிந்த சிவபெருமான், பிரம்மாவை விடுவிக்க முருகனிடம் கோரினார்.
நடந்ததை தனது தந்தையிடம் கூறிய முருகனிடம் சிவபெருமான் உனக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று கேட்க ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தமிழில் தனது தந்தைக்கு கூறி, அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையனானர்.

திருவிளையாடல் புராணத்தில் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று அவ்வையாருடன் முருகன் நடத்திய தமிழ் விளையாட்டை பெரும்பாலானோர் அறிவீர்கள். அவர் அவ்வையாரிடம் கொடியது எது? இனியது எது? பெரியது எது? அரியது எது? என்று கேட்க, அவ்வையார் அளித்த பதில் வாழ்வியலை விளக்குவதாக இருந்தது. கந்த புராணத்திற்கு நிகராக எந்த புராணமும் இல்லை. கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய இந்நூல் தலைசிறந்து விளங்குகிறது.

ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களில் பகைவர்களை அழித்த வரலாறு மட்டுமே உண்டு. ஆனால் கந்த புராணத்தில், பகைவன் சூரபத்மனை வீழ்த்திய முருகன், அவனுக்கு பெருவாழ்வு வழங்கும் வகையில் பிளந்தெடுத்த சூரபத்மனை ஒரு பாதி சேவலாக, தனது கொடியிலும் மறுபாதி தனது வாகனமாக, மயிலாகவும் தன்னுடன் முருக பெருமான் வைத்துக் கொண்டார். இது பகைவனுக்கும் அருள்வாய் நன் நெஞ்சே, என்ற தமிழ் பண்பாட்டை நிலை நிறுத்துகிறது.

தெய்வாணையை மணந்த முருகன் வள்ளியையும் திருமணம் செய்து, சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கினார். முருகு என்றாலே தமிழ். இத்தகு முருக பெருமானை குறித்து, திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, கந்தர் அலங்காரம், திருப்புகழ், பன்னிரு திருமுறை, போன்ற பல பல தமிழ் நூல்கள் முருகன் புகழ் பாடுகின்றன. இவைகள் அனைத்திலும் கௌமாரம் என்ற சமய பிரிவு பொதிந்துள்ளது. இந்த நேரத்தில் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கோயம்புத்தூர் சிவனபுரத்தில், கௌமாரம் மடம் நடத்தி வருவதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தற்போது நமது முருகனின் கௌமாரம் சமய பிரிவு எந்த நிலையில் இருக்கிறது என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கணபதி வழி கொண்ட காணப் பத்தியம், சிவ வழிபாடு கொண்ட சைவம் எனும் சிவனியம், விஷ்ணு வழிபாடு கொண்ட வைணவம், சூரிய வழிபாடு கொண்ட சௌரம், அம்மன் வழிபாடு கொண்ட சாக்தம், முருக வழிபாடு கொண்ட கௌமாரம்.

இவைகள் அனைத்தும் இந்து மதமாக ஒருங்கிணைக்கப்பட்ட பின்பு, முருக வழிபாடான கௌமாரம் தற்போது மிகப் பெரிய சரிவை சந்தித்து கொண்டு வருகிறது. தமிழில் நமது மூதாதையர்கள் முருக பெருமானை குறித்து எழுதிய நூல்களில் கௌமாரம் சமய பிரிவு உள்ளடங்கியுள்ளது. எனவே நாம் கௌமாரம் சமய பிரிவை காத்திட வேண்டும். இதன் மூலம் எண்ணற்ற தமிழ் நூல்களும், உண்மையான முருக வழிபாட்டினையும் காக்க முடியும். முருகனை தெய்வமாக வணங்கும் பக்தர்களின் தலையாய கடமை கௌமாரம் காப்பதாகும்.

பல்வேறு பகுதிகளில் கௌமாரம் மடங்கள் பல்கிபெறுக வேண்டும். இதனை நாம் செய்யாவிட்டால், தமிழையும், தமிழ் தெய்வமாக இருக்கும் முருக பெருமானின் உண்மையான வழிபாட்டு முறைகளையும் நாம் கட்டிக் காக்க தவறியவர்கள் ஆவோம். ஆங்காங்கே கௌமாரம் குறித்த கருத்தரங்கங்கள், நடத்தி, தமிழ் ஆய்ந்த பெருமக்களும், முருகனை வணங்கும் ஆன்மீக பெரியவர்களும் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து கௌமாரம் பிரிவை காக்க வேண்டும் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்