பெங்களூரு, மே 5: மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் போற்றி கௌரவிக்கப்பட வேண்டும் என்று நாம் சோழர்கள் அமைப்பின் கர்நாடக மாநிலத் தலைவர் டாக்டர் பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தெரிவித்தார்.
பெங்களூருத் தமிழ்ச்சங்கத்தில் நாம் சோழர்கள் அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) மகளிர் மற்றும் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் தங்கள் துறையில் சிறப்பாக பணியாற்றி மகளிர் மற்றும் தொழிலாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து, கௌரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு பேசினார். மேலும் அவர் பேசுகையில், கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட் வகிக்கும் தொழிலாளர் நலத்துறையில் பல்வேறு சலுகைகள், திட்டங்கள் தொழிலாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் கார், ஆட்டோ ஓட்டுநர்கள், தையல் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பயனடைய முடியும். அரசின் இந்த நலத்திட்டங்களின் பயனை அனைவரும் அடைய வேண்டும். இது தொடர்பாக யார் வேண்டுமானாலும் என்னை அணுகினால் தேவைப்படும் உதவிகள் செய்து தரப்படும். இது தொடர்பான விழிப்புணர்ச்சி குறைவாக உள்ளது.
தொழிலாளர்கள் நடத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்ச்சிகளை சம்பத், பார்த்திபன், முருகன் போன்ற தலைவர்கள், தொழிலாளர்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். இவர்கள் போன்றவர்களின் மூலம் லட்சக்கணகான தொழிலாளர்கள், மகளிர் பயன் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த கூட்டத்திற்கு குறைவானவர்களை அழைத்திருந்தாலும், எதிர்பார்த்ததைவிட அதிக திரளாக தொழிலாளர்களும், மகளிரும் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

எஸ்எஸ்எல்சி தேர்வில் 95 சதவிகித்திற்கும் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு ரூ. 10,001 ஊக்கத்தொகை, நாம் சோழர்கள் சார்பில் அதன் பொதுச் செயலாளர் விநாயகம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். எனவே எஸ்எஸ்எல்சி தேர்வில் 95 சதவிகித்திற்கும் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்கள் இந்த ஊக்கத்தொகையை அதிக அளவில் பெற வேண்டும். அதே போல் எஸ்எஸ்எல்சி தேர்வில் தமிழில் 95 சதத்திற்கும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் நாம் சோழர்கள் அமைப்பின் சர்வதேச தலைவர் ஜெயபிரகாஷ் குருஜி, பொதுச் செயலாளர் விநாயகம், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், செயலாளர் ஸ்ரீதரன், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவரான விஸ்வநாத், சம்பத், திருநாவுக்கரசு, ராஜசேகர், தட்சிணாமூர்த்தி, திருமலை, பார்த்திபன் உள்பட திரைப்படத்துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர், நடிகர்கள், கயல் தொடரைச் சேர்ந்த நடிகர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், மகளிர், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
































































