பெங்களூரு, மே 7: பேராசிரியர் முனைவர் கு.வணங்காமுடி மறைவுக்கு கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் வீர வணக்கத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ந.முத்துமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு சொல்லொணா துயரம் என் உள்ளத்தை ஆட்கொண்டுள்ளது. எனது வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் உடனிருந்து வழி நடத்திய பேராசான், எனது வழிகாட்டி, என் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் ஆருயிர் தமிழ் ஆசான் பேராசிரியர் முனைவர் கு.வணங்காமுடி அய்யா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி இடியாக என் மனதை நொறுக்கி உள்ளது.
காலமெல்லாம் தமிழுக்காகவும் தமிழரின் நலனுக்காகவும் பாடுபட்ட தன்னலம் இல்லாத மாமனிதன். கர்நாடக தமிழுக்கு கிடைத்த வாராது வந்த மாமணி. இலக்கியச் சுரங்கம், அயராது உழைக்கும் அறிவின் உயரம். சுறுசுறுப்பு மற்றும் உழைப்புக்கு சொந்தக்காரர். எந்நேரமும் தமிழுக்காக இயக்கம் போல செயலாற்றியவர். ஒழுக்கம், உண்மை, நேர்மை ஆகியவற்றின் அடையாளமாக விளங்கிய எங்கள் அய்யாவை இழந்து தவிக்கிறேன். தனிப்பட்ட முறையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டு இருக்கிறேன். மீண்டும் எப்போது அவரை சந்திப்பது?. கண்ணீரால் துடைத்தும் ஆற்றொணா வேதனையை போக்க முடியவில்லை. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அய்யா அவர்கள் மறைந்ததை நம்பவும் முடியவில்லை.
அய்யா அவர்கள் இல்லாமல் பெங்களூரில் தமிழ்ப் புத்தகத்திருவிழாவை எப்படி நடத்துவது என்றும் எனக்கு தெரியவில்லை. அய்யா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அன்பு மற்றும் பண்பின் ஊற்றாக விளங்கிய பேராசிரியர் அய்யா கு.வணங்காமுடி அவர்களுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்து, கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை ஓசூரில் கு.வணங்காமுடியின் இல்லத்தில் பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாவலர் கொ.வீ. நன்னன், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முத்துமணி நன்னன், துணைத் தலைவர் அ.செந்தில்நாதன், செயலாளர் ஆ.வி.மதியழகன், பொருளாளர் க.தினகரவேலு, பெங்களூர் தமிழ் சங்க துணைத் தலைவர் அமுத பாண்டியன், கர்நாடக மாநில திராவிடர் கழக செயலாளர் இரா.முல்லைக்கோ, வழக்குரைஞர் குணவேந்தன், பாரதிதாசன் தமிழ் மறுமலர்ச்சி மன்ற இணை ஒருங்கிணைப்பாளர் புலவர் மா.கார்த்தியாயினி, வெண்ணிலா, கர்நாடக மாநில தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் அ.தனஞ்செயன், செயலாளர் பிரபாகரன், கவிஞர் பாபு சசிதரன், உலகத் தமிழ் கழக தண்டுக்கிளை பொறுப்பாளர் க.அரசு, ஆடலரசன், தொழிலதிபர் அருள் கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் வீரவணக்கம் செலுத்தினார்.































































