முகப்பு Bengaluru நெருப்பலையார் பரம்பரைப் பாவலர் பேரவை-பாவாணர் பாட்டரங்கப் புலனக்குழு இணைந்து நடத்திய ஐம்பெரும் விழா

நெருப்பலையார் பரம்பரைப் பாவலர் பேரவை-பாவாணர் பாட்டரங்கப் புலனக்குழு இணைந்து நடத்திய ஐம்பெரும் விழா

8
0

பெங்களூர், ஆக. 17: நெருப்பலையார் பரம்பரைப் பாவலர் பேரவை-பாவாணர் பாட்டரங்கப் புலனக்குழு இணைந்து நடத்திய ஐம்பெரும் விழா, குயின்ஸ் சாலையில் உள்ள வேளாண்மை தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவன அரங்கத்தில் நடைபெற்றது.

வாழும் வரலாறு நெருப்பலையார், நெருப்பலையார் கிளிக்கண்ணி,பரிதி யாழ், யாழ் மொழியாள் ஆகிய நூல்களும் , நெருப்பலையார் இராம இளங்கோவன் அவர்களின் பவழவிழா மலரும் வெளியிடப்பட்டன. பாட்டுடைத் தலைவர் நெருப்பலையார் பாட்டரங்கமும், பாட்டுடைத் தலைவர் நெருப்பலையார் கருத்தரங்கமும், சான்றோருக்குச் சிறப்புப் பாராட்டு விருது வழங்கும் விழாவும் இணைந்து ஐம்பெரும் விழாவாக காலை ஒன்பது மணி முதல் மாலை ஏழு மணி வரை இனிதே நடைபெற்றது. விழாவின் முதல் அமர்வில் வா.சிறீதரன் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. சு.ஒளிமலரவன் குறள்வாழ்த்து பாடினார். முனைவர் எஸ்.டி.குமார் தலைமை ஏற்று நடத்தினார். நெருப்பலையார் பரம்பரைப் பாவலர்களான மருத்துவப் பாவலர்கள் ஆ.ச. கந்தன், ப. ஆதம் சேக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வா.கோபிநாத் வரவேற்புரை ஆற்றினார்.

விழா அமர்வின் இரண்டாவது நிகழ்வாக பவழவிழா காணும் பாட்டுடைத் தலைவர் நெருப்பலையார் பாட்டரங்கம் நடந்தது. டாக்டர் க. அழகேசன், கவித்தென்றல் மு.கலைமதி, ஆ.ச. கந்தன், ப. ஆதம் சேக் அலி, சா.சரவணன், தமிழலை தங்கசாரா, பொன் ஒளிநிலா, அன்பு செயா, ச.சக்திவேல், கொ.சி.சேகர் ஆகியோரின் தலைமையில் பத்து அமர்வுகளில் நூற்றுக்கணக்கான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான பாவலர்கள் எழுச்சி நாயகர் நெருப்பலையார், கோடியில் ஒருவர் நெருப்பலையார், நெஞ்சத் துடிப்பே நெருப்பலையார் உள்ளிட்ட தலைப்புகளில் தங்களின் பாக்களை வழங்கிச் சிறப்பித்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, விழாவின் மூன்றாவது அமர்வாக நெருப்பலையார் பரம்பரைப் பாவலர்களின் பாத்தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றன. வாழும் வரலாறு நெருப்பலையார், நெருப்பலையார் கிளிக்கண்ணி எனும் நூல்களை முனைவர் கா.மு.சேகர் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். விழாவின் சிறப்பு மலரையும், விஜயலட்சுமி காளிதாசன் எழுதிய யாழ்மொழியாள் நூலையும் வெளியிட்டு பையப்பனள்ளி டாக்டர் டி.இரமேஷ் வாழ்த்திப் பேசினார். செந்தமிழ் இயல் (செ.கற்பகம்) எழுதிய ‘பரிதியாழ்’ நூலை முத்துமணி நன்னன் வெளியிட்டு பாராட்டிப் பேசினார். நூல்களின் முதல்படியை கே.தட்சிணாமூர்த்தி, ஏ.வி.மதியழகன், இந்திரகுமார், காளிதாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவின் நான்காவது அமர்வாக கருத்தரங்கம் நடைபெற்றது. கவித்தென்றல் செங்கை சண்முகம் வரவேற்புரை ஆற்றிட, பையப்பனஹள்ளி டாக்டர் டி.இரமேஷ் தலைமை ஏற்று நடத்தினார். டாக்டர் க.அழகேசன், மருத்துவப் பாவலர்கள் ஆ.ச.கந்தன், ப. ஆதம் சேக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேராசிரியர் சரளா ஆறுமுகம் பாராட்டுரை வழங்கினார்.

அமர்வு ஐந்தில் கு.மாசிலாமணி, சு.சதாசிவம், க.சி.ஆஞ்சநேயன், ஆ.லாரன்ஸ், க.தினகர‌வேலு, கே.தட்சிணாமூர்த்தி, க.இராஜசேகர் ஆகியோர் உட்பட நூற்றுக்கணக்கான சான்றோர்க்கும் , பாவலர் பெருமக்களுக்கும் சால்வை, மாலை அணிவித்து, விருது பட்டயம், நூல்கள் வழங்கிப் பாராட்டிச் சிறப்புச் செய்யப் பட்டன.

முனைவர் கா.மு.சேகர், முனைவர் எஸ்.டி.குமார், பையப்பனஹ‌ள்ளி டாக்டர் டி. ரமேஷ், நெருப்பலையார் இராம இளங்கோவன் ஆகியோருக்கு இலக்கியத்திற்காக விருது வழங்கி பாராட்டி சிறப்புச் செய்யப் பட்டன.

மரபுப் பாவேந்தர் நெருப்பலையார் இராம இளங்கோவன் அவர்களுக்குப் பாவலர்கள் சால்வை அணிவித்து நூல்களையும், பரிசு பொருள்களையும் வழங்கினர். இதேபோல் பெங்களூர் தமிழ் மன்றம் சார்பில் கு.மாசிலாமணி, சு.சதாசிவம், க.சி.ஆஞ்சநேயன், ஆ.லாரன்ஸ் ஆகியோரும், கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் முத்துமணி நன்னன், எ.வி.மதியழகன், தினகரவேலு, இரா. வினோத் ஆகியோரும் சால்வை அணிவித்து பாராட்டுப் பட்டயம் வழங்கினர்.

210 யாப்பு வகையினங்களில் கவிதைப் படைத்து வென்ற நெருப்பலையார் பரம்பரைப் பாவலர்களுக்கு நெருப்பலையார் மரபுப் பாப் பரிதி என்ற விருது வழங்கப்பட்டன. விழாவிற்கு ஆஸ்திரேலியா, புதுவை, தமிழ் நாடு, கர்நாடகம் ஆகிய இடங்களிலிருந்து வந்திருந்தனர். விழாத் தொகுப்புரையைப் பாவலர் கொ.சி.சேகர் வழங்கினார். இலக்கிய இமயப் பாவலர் அ.கமல் அவர்களின் நன்றியுரையுடன் ஐம்பெரும் விழா இனிதே நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை நெருப்பலையார் பரம்பரைப் பாவலர் பேரவையினரும், பாவாணர் பாட்டரங்கப் புலனக் குழுவினரும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். விழாக்குழு சார்பில் அனைவருக்கும் பகலுணவு, தேநீர் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் அனைவருக்கும் நன்றி கூறி நெருப்பலையார் இராம இளங்கோவன் அவர்கள் பேசியதாவது: நான் பெருமைப்படுவது, நான் எழுதிய நூல்களையோ அல்லது நான் பெற்ற விருதுகளையோ, பரிசென்னும் அன்பளிப்புகளையோ, பாராட்டுகளையோ அல்லது எனக்குக் கிடைத்த பொறுப்பென்னும் பதவிகளையோ அல்ல. நான் உண்மையில் என்றென்றும் நினைத்து, நினைத்துப் பெருமைப்படுவது என்னிடம் யாப்பிலக்கணமும், மரபுப் பாக்களும், தனித்தமிழும், சிறுகதை எழுதுவதையும், பிழையின்றித் தமிழை எழுதுவதையும் கற்றுக் கொண்ட என் மாணாக்கர்கள் குறித்துதான் நான் பெருமை அடைகிறேன். நான் வாழ்ந்தேன் என்பதற்கான சான்று நீங்கள் தாம் . நான் ஆயிரக்கணக்கான மாணாக்கர்களை உருவாக்கி உலகுக்கு வழங்கியுள்ளேன். இன்னும் ஆயிரக்கணக்கான மாணாக்கர்களை உருவாக்குவேன்.

இந்த ஆயிரக்கணக்கான மாணவர்களாகிய நீங்கள் இதற்கு இணையாக ஒரு புதிய நெருப்பலையாரை உருவாக்குவீர்கள். இந்த நெருப்பலையார் மேலும் ஆயிரக்கணக்கான புதிய மாணாக்கர்களை உருவாக்குவார். அந்தப் புதியவர்கள் தங்கள் ஆசிரியரான நெருப்பலையாரை மேலும் மேலும் வளப்படுத்துவார்கள். இந்தத் தொடர்ச்சிதான், இந்தத் தமிழ்ப் பணிதான் என் வாழ்க்கையாகும். இந்தத் தொடர்ச்சிதான் என் வாழ்வின் பொருளாகும். நான் வாழ்ந்ததற்கான அடையாளமாகும்.

தமிழ் மொழியின் இலக்கணமென்னும் மெய்ப்பொருளான தமிழ் இலக்கியத்தின் பாடத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன். பலரும் இந்தியாவில் மட்டுமன்றி நாடு கடந்த அயல்நாட்டில் வாழும் தமிழர்கள் கூட புதிய புதிய மாணவர்கள் வந்து இணைகிறார்கள். நான் கற்பிக்கும் யாப்பிலக்கணம், மரபுப் பாக்கள், சிறுகதைகள், தனித்தமிழ் ஆகியவற்றை எளிமையாகக் கற்பிக்கின்றீர். இதுபோல் வேறு யாரும் கற்பிக்கவில்லை. ஆகவே எனக்குத் தெரிந்த வேறு சிலருக்குப் பரிந்துரைக்கலாமா? என்று கேட்பதுண்டு. இதேபோல் என்னிடம் பயின்றவர்கள் தங்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்; தங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டவர்கள் உண்டு. அவர்களுக்கு நான் கூறியது என்னவென்றால், நான் கற்பித்ததை மாணவர்கள் இளைஞர்களான மற்றவரிடம் கொண்டு போய்ச் சேருங்கள் அது போதும் என்பேன். இதுதான் நான் பெற்ற என்னுடைய வெற்றி, பெருமை என்று நினைக்கிறேன்.

ஆயிரக்கணக்கான துன்பத் துயரங்களுக்கு நடுவில், நோய்கள் வந்து வருத்திப் படுக்கையில் தள்ளியபோதும் பலரும் ஓய்வெடுங்கள் கடுமையாக உழைக்க வேண்டாம். சுவர் இருந்தால் தான் ஓவியம் வரைய முடியும்; நீங்கள் இருந்தால் தான் தமிழ்த் தொண்டு ஆற்ற முடியும் என்பர். ஆனால், மற்றவர்களைப் போல் படித்தோமா விட்டோமா என்று ஒருபோதும் என்னால் இருக்க முடியாது.

நான் உள்வாங்கிய அனைத்தையும் என் மாணவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். நான் கற்ற அனைத்தையும் என் மாணவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். என்னால் எல்லாருக்கும் அளிக்க முடிந்த ஒரே செல்வம் இதுதான். இருப்பதிலேயே கொடுமையான அறிவு என்னவென்றால் தமிழிலக்கணத்தை அறியாமல் தமிழர் போராடுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அது என்னுடைய போராட்டமுங் கூட. அந்தப் போராட்டத்தில் நீங்கள் வெற்றிப் பெறும்வரை, அறிவொளி உங்களை முற்றாகப் பற்றிக்கொள்ளும்வரை, பல்லாயிரக் கணக்கான நெருப்பலையார் எல்லாத் திசைகளிலும் பெருகும்வரை, நான் ஓர் ஆசிரியனாக நீடிப்பேன். என் வகுப்பறை அனைவருக்காகவும் திறந்திருக்கும்.

தமிழ் மொழியானது முதியோரிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. இதை இளைஞர்களிடமும், பள்ளிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமும் கொண்டு போய்ச் சேர்க்க நான் முதலில் ஆசிரியர் பேராசிரியர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று கற்பித்து வருகிறேன். யாரும் தமிழின் யாப்பிலக்கணம் தெரியாத தமிழர் இருக்கக் கூடாது என்பதே என் குறிக்கோளாகும். இதனால், ஆசிரியரோ, பேராசிரியரோ, கல்லூரியோ, பல்கலைக் கழகமோ செய்ய வேண்டிய கடமையை, யாரும் செய்ய முன்வராத நிலையில், நான் ஒரு தனி மாந்தர் படையைப் போல் செய்து கொண்டிருக்கிறேன்.

எல்லாரும் கொரானா என்னும் தீநுண்மி நோயை எதிர்மறையாக எண்ணி அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நான் மட்டும் நேர்மறையாக எண்ணி நான் பயன் படுத்திக் கொண்டு வெற்றியும் பெற்றேன். ஆகவே, நான் கொரானா கொடுத்த கொடையென என்று எழுதிய கட்டுரை இலக்கியம் பேசுகிறது என்ற திங்களிதழில் வெளிவந்து பெரும் பாராட்டைப் பெற்றேன். நான் யாப்பிலக்கணம் கற்பிக்க ஏற்ற காலமாக்கிப் பயன்படுத்திக் கொண்டேன். ஒன்றை வெளிப்படுத்த, வினைத்திறனாற்ற திறமையும், அதற்கான வாய்ப்புந்தான் இன்றியமையாத ஒன்றாகும். இதை நான் சரியாகவே பயன்படுத்தியதாகக் கருதுகிறேன்.

ஆம்! நான் கற்பிக்கக் கற்றவர்கள், கற்காதவர்கள், ஏழை, செல்வந்தர், முதியோர், இளையோர், தோழமையர், பகையாளி, உறவினர் என்றெல்லாம் எந்த வேறுபாடும், பாகுபாடும் , எதிர்பார்ப்பும் பார்க்காமல் எடைத்தட்டு போல நின்று பாடுபட்டு இலக்கிய உலகில் எனக்கான ஓர் இடத்தைப் பிடித்துள்ளேன். இதனால், உலக வரைப்படத்தை இந்தியாவை நீக்கி விட்டு எப்படி வரைய முடியாதோ அதேபோல் என்னை நீக்கி விட்டு இருபத்தோராம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றை எவராலும் எழுதி விட முடியாது என்பதே என் அசைக்க முடியாத உண்மையாகும். ஆகவே, என் தமிழ்த் தொண்டு உயிருள்ள வரை தொடருவேன் என்பதே என்னுடைய விழைவாகும்.

நான் சூரியனுக்கே சூடு போட்டவனாக மாறிப்போனேன். ஆம்! ஆசிரியர் பேராசிரியர்களுக்கே நான் ஆசிரியனாய், பேராசிரியனாய் மாறி கற்பித்தேன். கற்பித்ததோடு நில்லாமல் கற்பித்த ஆசிரியரே கற்றுக் கொண்ட மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கான விருதுகள் இதுவரை வழங்கியவன் உலகிலேயே நான் மட்டுமே என்று ஆணித் தரமாக சொல்லுகிறேன். இதேபோல், மரபுப் பாக்கள் பயிற்சிக்காக ஒரு குமுகாய ஊடகம் உண்டென்றால் அது பாவாணர் பாட்டரங்கம் மட்டுமே. இதேபோல், சிறுகதை பயிற்சிக்காக ஒரு குமுகாய ஊடகம் உண்டென்றால் உலகிலேயே நெருப்பலையார் கதைப் பட்டறை மட்டுமே. என்னைப் பார்த்துப் பலரும் முயன்று தோற்றவர்கள் உண்டு. நான் மட்டும் வென்றேன் என்று மார்தட்டி நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்லிக் கொள்ள முடியும். அந்தளவிற்கு நேர்த்தியாக செய்துள்ளேன். இன்னமும் செய்வேன். பல்லாயிரக்கணக்கானவர்களை உருவாக்குவேன் என்று வலியுறுத்துகிறேன் என்று பேசினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்