பெங்களூரு, ஜூன் 3: திமுக 7 வது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.
பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில், கலைஞர் மு.கருணாநிதியின் 102வது பிறந்த நாளையொட்டி கர்நாடக திமுக சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்து, இனிப்பு வழங்கப்பட்டது.
பின்னர் அவர் பேசியது: கலைஞரின் சாதனை என்பது தமிழ்நாட்டில் ஒரு எழுச்சி, தமிழர்களிடத்தில் ஒரு எழுச்சி ஏற்படுத்தியதாகும். தமிழ்நாட்டை உலக அளவில் கொண்டு சென்ற பெருமை கலைஞர் மு.கருணாநிதியை சாரும்.
தமிழ், தமிழ்நாடு என்பதோடு இல்லாமல், தமிழ்நாட்டிற்கு மாநில சுயாட்சியை, மத்திய அரசிடம் போராடி பெற்று தந்தவர் கலைஞர் ஆவார். மாநில அரசின் உரிமை காக்கும் வகையில் மத்திய அரசுடன் எதிர்த்து உரிமை பெற்று தந்தார் மட்டுமல்லாது, மாநிலங்களில் முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை பெற்று தந்தார்.

கலைஞரின் எழுத்து, பேச்சு, ஆற்றல் ஆகியவை தமிழர்களை எழுச்சி உடையவர்களாக ஆக்கியது. தமிழர்கள் இன்று விழிப்புடன் இருப்பதற்கு கலைஞரின் எழுத்தும், பேச்சும்தான் முக்கிய காரணமாகும். அதன் வழியாகத்தின் தற்போது தமிழ்நாட்டில் முதல்வராக இருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் வழித்தொட்டு, அண்ணா வழி தொடர்ந்து, இன்றைய தினம் தமிழ்நாட்டில் சாதனைக்கு மேல் சாதனைகளை செய்து வருகிறார்.
திராவிட மாடல் அரசை நடத்திக் கொண்டு உலகமே பாராட்டும் வகையில் திகழ்கிறார். அவரை யாரும் தொட்டு பார்க்கமுடியாத வகையில் மாபெரும் சக்தியாக தளபதி மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். ஒரு காலத்தில் டெல்லி என்ன சொல்கிறதோ அதைத்தான் மாநில அரசுகள் செய்து வந்தன. ஆனால் தற்போது நிலை மாறி, தமிழ்நாட்டில் தளபதி ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ, அதனை மத்திய அரசு மட்டுமின்றி உலகமே உன்னிப்பாக கவனிக்கிறது.
அவர் கொண்டு வந்த குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் பின்பற்றி வருகின்றன என்றால், அவரது பெருமையும், புகழும் ஓங்கி உள்ளதையே எடுத்துக் காட்டுகிறது. 2026 ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, தளபது மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார்.

திமுக 7 வது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். அதற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் கர்நாடக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. கலைஞர் மு.க.கருணாநிதியில் 102வது பிறந்த நாளை நாங்கள் மட்டுமின்றி, உலகமே சிறப்பாக கொண்டாடி வருகிறது என்றார்.
நிகழ்வில் மாநில திமுக முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் வி.எஸ் மணி, முன்னாள் பொது பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ். சுந்தரேசன், கர்நாடக இலக்கிய அணி தலைவர் முருக தருமலிங்கம், மகளிர் அணி அமைப்பாளர் சற்குணம், துணை அமைப்பாளர் மங்கம்மா, சாந்தினி சத்யானந்தம், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜசேகர், முருகானந்தம், ராஜ்குமார் வார்டு செயலாளர் மு. பன்னீர்செல்வம்,
தொமுச பேரவை மாநில செயலாளர் காஞ்சி சிவசங்கர், துணைத் தலைவர் ஜெயபால், கோ.கருணாநிதி, மகேஷ் பாபு, சென்னை மாவட்டம் முன்னாள் துணைச் செயலாளர் சஞ்சய் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், சாம்ராஜ் பேட்டை கிளைச் செயலாளர் ஜி.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.































































