பெங்களூரு, ஜன. 6: திருவள்ளுவர் ஜெயந்தியில் கலந்து கொள்ள தமிழர்களிடம் எழுச்சியைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) பெங்களூரு தமிழ்ச் சங்க வளாகத்தில் பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தலைமையில் திருவள்ளுவர் ஜெயந்தி தின ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியது: தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2 கூட்டங்களிலும் மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அதைவிட இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிக அளவில் மக்கள் கூடியுள்ளனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் மதம், ஜாதி, அரசியல் கட்சிகளை கடந்து வந்துள்ளனர். இதன் மூலம், கர்நாடகம் முழுவதும் திருவள்ளுவர் ஜெயந்தியில் கலந்து கொள்ள தமிழர்களிடம் எழுச்சியைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விழா ஜன. 15 ஆம் தேதி அல்சூர் திருவள்ளுவர் சிலை அருகே காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
திருவள்ளுவர் ஜெயந்திக்கு சாம்ராஜ்பேட்டையைச் சேர்ந்த விநாயக், ரூ. 1 லட்சம் நிதி அளித்துள்ளார். அதே போல விழாவிற்கு ரூ. 25 ஆயிரம் அளிப்பதாக உரிமைக்குரல் பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நலிவுற்றோர் சங்கத்தின் தலைவர் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யார் நிதி வழங்கினாலும், அதற்கு உரிய கணக்கு காண்பிக்கப்படும். விழா சிறப்பாக நடைபெற பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். ஜெயந்திக்கு வர திரைப்பட இயக்குனர் கங்கை அமரன் ஒப்புக் கொண்டுள்ளார். அதே போல தமிழ் திரைப்பட நடிகர்கள் ஒரு சிலர் வரவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதே போல கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்கரெட்டி, தினேஷ் குண்டுராவ், ஜமீர் அகமதுகான், என்.ஏ.ஹாரீஷ், ரிஸ்வான் அர்ஷத், சீனிவாஸ், முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, விஜயேந்திரா, எம்பி பி.சி.மோகன் உள்ளிடோர் விழாவிற்கு வருகை தர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இங்கு கூடி உள்ள பெரும்திரளான கூட்டத்தை பார்க்கும் போது விழா வெற்றி பெரும் என்பதில் சந்தேகம் இல்லை. இதே ஒற்றுமையை தமிழர்கள் விழாவிலும் காட்ட வேண்டும். விழாவிற்கு கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட தென்னிந்தியாவில் தமிழர்கள் மட்டுமின்றி, கன்னட தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளைச் சேர்ந்த நமது சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பு சேர்க்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் முன்னாள் பெங்களூரு தமிழ்ச்சங்கச் செயலாளர் வா.ஸ்ரீதரன், விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் பொருளாளர் கோபிநாத், விநாயக், ரகுதேவராஜ், உரிமைக்குரல் எம்.ஜி.ஆர் ரவி, மாநில திமுகவின் பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஏ.டி.ஆனந்தராஜ், நாம்தேவ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், ராஜசேகர், பாஜகவைச் சேர்ந்த அல்சூர் சண்முகம், செந்தில்நாதன், ஆதர்ஷா கார், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் செயலாளர் சம்பத், சண்முக சுந்தரம், சங்கர், ராஜகுரு, தேன்மொழியான், ரவி கோவலன், திருமலை உள்பட காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
































































