பெங்களூரு, ஆக. 31: பகுத்தறிவுத் தந்தை பெரியாருக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டவர்கள் என்று பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவரும், தாய்மொழிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.

பெங்களூரு தயானந்தநகர் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) பகத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாள் விழா மற்றும் அறிஞர் ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழா முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் நடைபெற்றது.

பெங்களூரு தயானந்தநகர் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) பகத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாள் விழா மற்றும் அறிஞர் ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழா முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் சோழிங்கநல்லூர் திராவிடக் கழகத்தின் காப்பாளர் இரா.வீரபத்திரன், கர்நாடக மாநில திராவிடர் கழகத்தின் தலைவர் மு.சானகிராமன், துணைத் தலைவர் சே.குணவேந்தன், மார்க்சிய பெரியார்ப் பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், புதிய சிந்தனையாளன் பத்திரிகையின் ஆசிரியருமான வாலாசா வல்லபன், கலைச்செல்வி, ப.அரசு, பொ.பன்முகன், இரா.பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய எஸ்.டி.குமார், பெங்களூரில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதே போல் அறிஞர் ஆனைமுத்து ஐயாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கி.மு 300 ஆண்டுகளுக்கு முன்பு ஏதென்ஸ் நகர வீதிகளில் வயதான முதியவர் சாக்ரடீஸ் ‘உன்னையே நீ அறிவாய்’ என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால் தமிழகத்தின் தெருக்களில், 94 வயதிலும் மூத்திரப்பையை சுமந்த ஒருவர், சுயமரியாதையையும், பகுத்தறிவையும், மூடப்பழக்கங்களையும் சாடிக் கொண்டு, தமிழகத்தை தட்டெழுப்பிக் கொண்டிருந்தார் என்று சொன்னால் அது தந்தை பெரியார் அவர்கள்தான். அவருக்கும் நாம் அனைவரும் நன்றி கடன்பட்டவர்களாக இருக்கின்றோம்.

தந்தை பெரியாரின் கருத்துக்களும், அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களும் பொதுவாக ஒன்றாக இருக்கின்றன. பத்தாம் வகுப்பு வரை படித்த பெரியார் பட்டறிவு வைத்து பாடம் நடத்தினார். அம்பேத்கர் அதிகம் படித்து விட்டு, படித்த அறிவை வைத்து பஞ்சமர்களுக்குகாகவும், சூத்திரர்களுக்காகவும் பாடுபட்டார். பெரியார் மதத்திற்குள் இருந்தே போராடினார். அவர் மதத்தை விட்டு வெளியேறி, தனது கருத்துக்களை தெரிவித்தார். ஆக தந்தை பெரியாரையும், அம்பேத்கரையும் பின்பற்றுகிறவர்கள் ஒன்றாக இணைந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

அடுத்து, 1960களில் இருந்து அறிஞர் ஆனைமுத்து அவர்கள், தந்தை பெரியாரைப் பின்பற்றி வருகிறார். அவர் வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியாரை பின்பற்றி வந்தார். அவர் தந்தை பெரியாரின் கருத்துக்களையும், சிந்தனைகளையும் மக்களிடத்தில் பரப்பி வந்தார். பெரியாரின் மறைவு பிறகு ஆனைமுத்து அவர்கள் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். அவர் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாலும் பெரியாரிடம் இருந்து நீங்கவில்லை. தற்போது ஒரு கட்சியில் இருந்து வெளியேறி, பின்பு வேறொரு கட்சியில் இணைந்த ஒரு சிலர், தாங்கள் முன்பிருந்த கட்சி தலைவரை இகழ்வது வாடிக்கையாக உள்ளது. ஆனால் ஒருபோதும் ஆனைமுத்து அவர்கள் பெரியாரை இகழவில்லை.

திராவிட கழகத்திலிருந்து பிரிந்த போதும் கொள்கையில் மாறுபடாமல் மார்க்சீச சிந்தனையோடு, பெரியாரியலையும் இணைத்துக் கொண்டு பிற்படுத்த மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். அதேபோல் எம்ஜிஆர் அவர்களிடத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 30 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த உதவியர் என்பது குறிப்பிடத்தக்கது.































































